7500 கிலோ மீட்டர் ஆன்மிக பயணம்! செல்ல நாயுடன் பாதயாத்திரை செய்யும் இளைஞர்!!
சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஆன்மீகப் பயணமாக தான் வளர்க்கும் நாயுடன் ராமேஸ்வரம் வரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
சிக்கிம் மாநிலத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞரான ஜக்கீஸ் என்பவர் ஆன்மீகப் பயணம் செல்ல முடிவெடுத்தார். மேலும் நடைபயணமாக தான் வளர்க்கும் பட்டர் என்ற நாயுடன் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தார்.
இதையடுத்து சிக்கிம் மாநிலம் முதல் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம் வரை 7500 கிலோ மீட்டர் நடைபயணமாக செல்ல பயணத் திட்டம் தீட்டினார். பின்னர் நாய்க்கும் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள், சத்துணவு, மருந்துகள் உள்ளிட்டவை எடுத்துக் கொண்ட இளைஞர் ஜக்கீஸ் கடந்த டிசம்பர் மாதம் சிக்கிம் மாநிலத்தில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து கிளம்பினார்.
அதன்படி சிக்கிம் மாநிலத்தில் தொடங்கும் இவருடைய பயணம் லக்னோ, ஜெய்ப்பூர், மத்தியப்பிரதேசம், தெலுங்கானா, ஆந்திரா, விசாகப்பட்டினம் வழியாக சென்னை வந்து பின்னர் மாமல்லபுரம், வேளாங்கண்ணி, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரம் செல்லவுள்ளார்.
இந்நிலையில் இது குறித்து இளைஞர் ஹக்கீம் அவர்கள் “இந்த நடைபயணம் நான் வளர்க்கும் பட்டருக்கு(நாய்) ஆன்மீகப் பயணம் போல இருக்கும். நான் இந்த நடைபயணத்தில் வழிகளில் பார்க்கும் அனைத்து நபர்களிடமும் கால்நடைகள் மீது பாசம் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன்.
இந்த நடைபயணம் மூலமாக பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரங்களை என்னால் பார்க்க முடிந்தது. மேலும் பலவகையான உணவுகளை ருசித்து சாப்பிட முடிந்தது. நாங்கள் இருவரும் ராமேஸ்வரம் சென்று வழிபாடு நடத்தி முடித்த பிறகு நாங்கள் எங்கள் ஊருக்கு ரயில் மூலமாக சென்று விடுவோம்” என்று கூறினார்.