மதுரையில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சிலை! மேயர் தெரிவித்த தகவல்!

Photo of author

By Sakthi

மதுரையில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சிலை! மேயர் தெரிவித்த தகவல்!

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மதுரை மாவட்டத்தில் சிலை வைப்பது தொடர்பான கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி அவர்கள் தெரிவித்துள்ளார்.

திரைத்துறையில் நடிகராக அறிமுகமாகிய நடிகர் விஜயகாந்த் அவர்கள் நாளடைவில் நல்ல நல்ல திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பின்னர் தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய நடிகர் விஜயகாந்த் அரசியலில் நுழைந்தார். அதன் பின்னர் 2011ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட நடிகர் விஜயகாந்த் அவர்கள் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் சட்டசபையில் எதிர்கட்சி தலைவராகவும் இருந்தார்.

பல ஏழைகளுக்கு உணவு வழங்கிய நடிகர் விஜயகாந்த் அவர்கள் கேப்டன் என்று அழைக்கப்பட்டார். கடந்த சில வருடங்களாகவே தொடர் மருத்துவ சிகிச்சையில் நடிகர் விஜயகாந்த் அவர்கள் இருந்து வந்தார்.

இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி வழக்கமான மருத்துவ சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தொடர்பு தீவிர சிகிச்சையில் இருந்த நடிகர் விஜயகாந்த் அவர்கள் சிகிச்சை பலன் இல்லாமல் கடந்த 2023ம் வருடம் டிசம்பர் மாதம் 28ம் தேதி காலை உயிரிழந்தார்.

இவருடைய மறைவு தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நடிகர் விஜயகாந்த் மறைவிற்கு முதலமைச்சர், ஆளுநர், அரசியல் பிரபலங்கள், திரையுலகினர் பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில் நடிகர் விஜயகாந்த் அவர்களுக்கு சென்னையில் திருவுருவ சிலையும்! மணிமண்டபமும் கட்ட வேண்டும் என்று அவருடைய மனைவியும் தேமுதிக கட்சியின் பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

இதை தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தின் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் அவர்கள் “மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மதுரையில் சிலை வைக்க வேண்டும். மதுரை மாநகராட்சி அதற்கு இடம் கொடுத்து அனுமதி வழங்க வேண்டும்” என்று மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி அவர்களுக்கு கடிதம் எழுதினார்.

இது குறித்து மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி அவர்கள் “விருதுநகர் மாவட்ட எம்.பி மாணிக்கம் தாகூர் அவர்கள் எனக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அவருடைய சார்பாக காங்கிரஸ் கட்சியின் மதுரை மாநகர செயலாளர் கார்த்திகேயன் அவர்களும் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர்களும் இணைந்து என்னிடம் கோரிக்கை வைத்தனர்.

மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு மதுரையில் சிலை வைக்க வேண்டும் என்று அவர்கள் வைத்த கோரிக்கையை அமைச்சர்கள் மூலமாக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்கள் வைத்த கோரிக்கை பரிசீலிக்கப்படும்” என்று கூறினார்.