நாகர்கோவில் அருகே சைக்கிள் திருடிய வாலிபர் கைது!

Photo of author

By Savitha

நாகர்கோவிலில் அருகே சைக்கிள் திருடிய வாலிபர் கைது சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் புன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜீவ். இவர் தனது வீட்டின் காம்ப வுண்டுக்குள் விலை உயர்ந்த சைக்கிள் ஒன்றை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது சைக்கிள் மாயமாகி இருந்தது. இதை யடுத்து ராஜீவ் பல இடங்களில் தேடிப் பார்த்தும் சைக்கிள் கிடைக்கவில்லை.

இதுகுறித்து நேசமணிநகர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.
அப்போது கொள்ளையன் ஒருவன் சைக்கிளை திருடி செல்வதுபோன்ற காட்சி பதிவாகி இருந்தது.

அந்த காட்சிகளை கைப்பற்றி போலீசார் தேடுதல் வேட்டை யில் ஈடுபட்டனர். அப்போது சைக்கிளை திருடி சென்றது பழனி பகுதியை சேர்ந்த அனீஸ் என்ற மணி என்பது தெரியவந்தது.

போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது அவர் குமரி மாவட்டம் கீரிப்பாறை பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட் ஒன்றில் கடந்த சில ஆண்டுகளாக தங்கி வேலை பார்ப்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவரை பிடிக்க அங்கு சென்றனர்.

அப்போது அனீசை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட அனீசிடம் போலீசார் விசாரணை நடத்திய போது சைக்கிள் திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும் வேறு எங்காவது அனீஸ் கைவரிசை காட்டியுள்ளாரா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

நாகர்கோவில் நகரில் கடந்த சில நாட்களாகவே இரு சக்கர வாகனம் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வீட்டின் முன்பு நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களை மர்மநபர்கள் திருடி செல்வது தொடர்கதையாக நடந்து வருகிறது.