ஐபிஎல் முன்னாள் தலைவருக்கு எச்சரிக்கை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Photo of author

By Vijay

ஐபிஎல் முன்னாள் தலைவருக்கு எச்சரிக்கை! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.
சமூக வலைதளங்களில் நீதித்துறை பற்றிய அவதூறு கருத்து தெரிவித்ததை அடுத்து உச்சநீதிமன்றம் சார்பில் லலித் மோடி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கிய முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி தெரிவித்த பகிரங்க மன்னிப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. மேலும் அவர் மீதான வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம் ஆர் ஷா மற்றும் சிடி ரவிகுமார் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது லலித் மோடி சார்பில் அவரது வாக்குமூலம் வழக்கறிஞர் மூலமாக தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில், எதிர்காலத்தில் நீதிமன்றங்களின் கண்ணியம், இந்திய நீதித்துறை மற்றும் நீதிபதிகளின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எவ்வித கருத்தையும் தெரிவிக்க மாட்டேன், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் தனது கருத்தினை தெரிவித்துள்ளது அதில், நிபந்தனையற்ற, அடிமனதில் இருந்து மன்னிப்பு கோரும் பட்சத்தில், அதனை வழங்குவது தான் சரி என்று நீதிமன்றம் நம்பிக்கை கொண்டுள்ளது.
இதன் காரணமாக நிபந்தனையற்ற மன்னிப்பை நாங்கள் பெருமனதோடு ஏற்றுக் கொள்கிறோம். மன்னிப்பை ஏற்றுக் கொள்வதால் இந்த வழக்கை நாங்கள் முடித்து வைக்கிறோம்,’ என்று நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது.
அனைவரும் இந்த துறைக்கு முழு மரியாதை கொடுக்க வேண்டும் என்பதே எங்களின் ஒற்றை கோரிக்கையாக இருந்தது என்று நீதிமன்றம் தெரிவித்தது. முன்னதாக ஏப்ரல் 13 ஆம் தேதி உச்சநீதிமன்றம் சார்பில் லலித் மோடி கூறிய அவதூறான கருத்துக்கு அவர் சமூக வலைதளங்கள் மற்றும் தேசிய நாளேடுகள் வாயிலாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.