காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி குடும்பத்தில் இருப்பவர்களை தலைவராக நியமிக்ககூடாது என கடிதம் எழுதியவர்கள் மீது கட்சிக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது
காங்கிரஸ் கட்சியில் ராகுல்காந்தி பதவி விலகிய நிலையில் தற்போது இடைக்கால தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை நியமிக்க வலியுறுத்தி அண்மையில் அக்கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் நடந்தது.
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கப்படுவது குறித்து முன்னதாகவே இந்தியா முழுவதிலிருந்தும் 20க்கும் மேற்பட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் அக்கட்சியின் தலைமைக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
அந்தக் கடிதத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்கள் யாரும் தலைவராக நியமிக்கப்படாமல், காந்தி குடும்பத்தைச் சாராத புதிய ஒரு தலைவரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதனை அடுத்து நடந்து முடிந்த காங்கிரஸ் காரிய கமிட்டியில் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் கருத்து மோதல்களும், சலசலப்பும் ஏற்பட்டன.
இறுதி முடிவாக புதிய தலைவரை தேர்வு செய்யும் வரையில் சோனியா காந்தியே இடைக்கால தலைவராக தொடர வேண்டும் என பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்தது.
அதன்பிறகு, காங்கிரஸின் இந்த உட்கட்சிப் பூசல்கள் முடிவுக்கு வந்ததாக எண்ணிய நிலையில், அங்கு மீண்டும் புதிய பிரச்னை பூதாகரமாக எழுந்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியில் காந்தி குடும்பத்தை சேர்ந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்றோர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படக்கூடாது என, கடிதம் எழுதியவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரப் பிரதேச காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் குழுவாக இணைந்து கோஷமிட்டனர்.
அதில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் நிர்வாகியும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜிடின் பிரசாதாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதனால் மீண்டும் காங்கிரஸ் கட்சியினுள் உள்கட்சி பூசல், கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.
இதனைத்தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட காங்கிரஸின் மூத்த தலைவரான கபில் சிபல், “உத்தரப்பிரதேச மாநிலத்தின் காங்கிரஸினரால் ஜிடின் பிரசாதா கட்சியில் இருந்து தள்ளி வைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு பேசியுள்ளார்.
Unfortunate that Jitin Prasada is being officially targeted in UP
Congress needs to target the BJP with surgical strikes instead wasting its energy by targeting its own
— Kapil Sibal (@KapilSibal) August 27, 2020
மேலும், பாஜகவுடன் தான் காங்கிரஸ் சர்ஜிக்கல் ஸ்டிரைக் செய்ய வேண்டுமே தவிர, உட்கட்சிக்குள்ளேயே சர்ஜிகல் ஸ்ட்ரைக் செய்வது நேர விரயம் தான்” என கபில் சிபல் தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்தினை ஏற்று காங்கிரஸ் எம்.பி மணிஷ் திவாரி வரவேற்றுள்ளார்.