அதிரடி விலை குறைப்பு! கிலோ இருபது ரூபாயாக இருந்த நிலையில் தற்போது மூன்று ரூபாய்க்கு விற்கப்படும் ஆச்சரியம்!!
சென்னையில் உள்ள மொத்தம் பதினைந்து மண்டலங்களில் இருக்கும் குப்பைகளை சேகரிக்கும் பணியை தனியார் நிறுவனங்களும் மற்றும் மாநகராட்சியும் செய்து வருகின்றன. இப்பணிகளில், சுமார் 19,000-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என முதலில் தரம் பிரித்துவிடுவர். மக்கும் குப்பைகளை உரம் தயாரிக்கும் நிலையங்களுக்கும், மக்காத குப்பைகள் மற்றும் கழிவுகளை சிமெண்ட் தொழிற்சாலைகளுக்கும் அனுப்புகின்றனர். இதற்காக 208 உரம் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் மக்கும் குப்பைகளை தரம் பிரித்து, மறுசுழற்சி செய்து அதில் உற்பத்தி செய்யப்பட்ட உரத்தை கொண்டு, பசுமை விவசாயம் செய்யப்படுகிறது. பூச்சிக்கொல்லி மருந்து எதுவும் தெளிக்காமல், மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்படும் இந்த இயற்கை உரத்தை கொண்டு, விவசாயம் செய்யப்படுவதன் மூலம் இதில் இருந்து பெறப்படும் காய்கறிகள் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்கும் என மாநகராட்சி துறை தெரிவித்துள்ளது.
இப்படி சென்னை மாநகராட்சியால் மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை முறையில் தயாரிக்கப்படும் பசுமை உரமானது, கிலோ இருபது ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த உரத்தின் விலையை 17 ரூபாய் குறைத்து, மூன்று ரூபாயாக அறிவித்துள்ளது மாநகராட்சி.
இவ்வாறு குப்பையிலிருந்து தயாரிக்கப்படும் உரத்தை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்கள் நிலத்திற்கும் மற்றும் தோட்டத்திற்கும் வாங்கி பயன்படுத்துவதன் மூலம் சென்னையை குப்பையில்லாத பகுதியாக மாற்றுவதோடு மட்டுமில்லாமல் மக்களும் பயனடையலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.