தமிழ்நாட்டில் பால்வளத் துறையில் தற்போது பயன்பாட்டில் உள்ள பழைய கால இயந்திரங்களை மாற்றி நவீன இயந்திரங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், கால்நடை தீவன உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து பால் உற்பத்தியை 70 லிட்டராக உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுடன் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்ற கலந்தாய்வு கூட்டம், ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டதோடு பள்ளிகளில் காணப்படும் குறைகள் குறித்து அமைச்சர் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தான் பால்வளத்துறை அமைச்சர் ஆவதற்கு முன்பே கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தை நடத்தி மாவட்டத்தில் பால்வளத்தை அதிகரிப்பது குறித்து ஆய்வுக் கூட்டத்தை நடத்தியதாகவும் இந்த நிலையில் தனக்கு பால்வளத்துறை அமைச்சர் பதவி கிடைத்ததாகவும் கூறிய அவர், தற்போது தனக்கு முன்பு இருக்கின்ற பணியாக நிர்வாகத்தை சீர் செய்வது குறித்து கள ஆய்வு செய்துள்ளதாகவும் தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 45 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யும் நிலையிலிருந்து 70 லட்சமாக உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், பழைய கால இயந்திரங்களை மாற்றி நவீன இயந்திர வசதிகளை மேம்படுத்தவும் கால்நடை தீவன உற்பத்தியை அதிகரிப்பதற்கு பிற துறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளோடு இணைந்து அதற்குரிய நடவடிக்கையை துவக்கி இருப்பதாகவும் தமிழகம் முழுவதும் 2 லட்சம் கறவை மாடுகளை வழங்குவதற்கான பணி சேலத்தில் துவங்கிய நிலையில் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.
2000 ரூபாய் நோட்டிற்கு தடை விதிக்கும் மத்திய அரசின் திட்டம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஏற்கனவே 500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு தடை விதித்து மக்கள் அவதிப்பட்ட நிலையில், சாதாரண மக்களை பாதிக்காத வகையில் அரசின் திட்டங்கள் அமைய வேண்டும் எனவும் சாதாரண மக்களை மையப்படுத்தும் வகையில் திட்டங்கள் இருக்க வேண்டும் எனவும் அவர்களை பாதிப்படையச் செய்யும் வகையில் திட்டங்கள் இருக்கக் கூடாது என அவர் கூறினார்.