இவரா கோலிவுட்டின் சோனு சூட்?

Photo of author

By Parthipan K

பாலிவுட் நடிகர் சோனு சூட் பெரும்பாலும் தான் நடித்த திரைப்படங்களில் வில்லனாகவே தோன்றுவார். சந்திரமுகி, அருந்ததி திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிச்சயமானவர். அருந்ததி திரைப்படத்தில் தனது மிரட்டலான நடிப்பால் அசத்தியிருப்பார்.

கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தின் போது ஏழை, எளிய மக்களுக்கு பல உதவிகளை செய்தார். மாணவர்களின் ஆன்லைன் வகுப்பிற்கும் சோனு சூட் கரம் கொடுத்து உதவினார். இதனால் மக்களிடையே பல பாராட்டுக்களையும் பெற்றார்.

இதே போல் தமிழ்நாட்டிலும் பிரபல நடிகர் ஒருவர் சத்தமில்லாமல் பல உதவிகளை செய்து வருகிறார்.

தயாரிப்பாளர் G.K ரெட்டியின் மகன் நடிகர் விஷால் ஆவார். இவர் ‘செல்லமே’ என்ற திரைப்படத்தில் நடிகராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கி இப்போது கோலிவுட்டின் அசைக்கா முடியா இடத்தில் இருக்கிறார்.

 

சினிமாவில் மட்டும் அதிரடி காட்டாமல் தனது சொந்த வாழ்க்கையிலும் பல அதிரடியான விடயங்களை செய்து வருகிறார். தமிழ் ராக்கர்ஸ் என்னும் இணைய தளத்தை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தி இருக்கிறார். தமிழ்நாடு நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு சரத்குமாரை வெற்றி கண்டார்.

தற்போது விஷால் தனது அம்மாவின் பெயரில் தேவி அறக்கட்டளை ஆரம்பித்து பல உதவிகளை செய்து வருகிறார்.

கொரோனா காலத்தில் மக்களுக்கு உணவு அளித்தது. தனது பிறந்த நாளின் போது ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிரியாணி வழங்கினார். ‘எனிமி’ திரைப்படத்தின் வெற்றி கொண்டாடத்திற்க்காக ஆதரவற்றோருக்கு உணவு வழங்கினார்.

தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை முதல் அடை மழை விடாது பெய்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது. சென்னையில் பல பகுதிகள் நீரில் மூழ்கிவிட்டன.

 

நடிகர் விஷால் இந்நிலையில் மக்களுக்கு உதவும் விதமாக சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வழங்கியுள்ளார்.

கடந்த வாரத்தில் ஹைதிராபாத்தில் நடந்த விழா ஒன்றில் பேசிய நடிகர் விஷால், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் இலவசக் கல்வி அளித்த 1800 மாணவர்களின் கல்வி செலவை தான் ஏற்றுக் கொள்வதாக அறிவித்திருந்தார்.