பாலிவுட் திரையுலகின் மிக பிரபலமான நடிகைகளுள் ஒருவரான வித்யாபாலனுக்கு பல ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, பல நடிகைகளுக்கு இவர் ரோல் மாடலாகவும் இருந்து வருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய பல கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார். இவரது நடிப்பு திறமையை பாராட்டி இவருக்கு பிலிம்பேர் விருது, தேசிய விருது போன்ற பல விருதுகள் கிடைத்துள்ளது மற்றும் இவருக்கு கடந்த 2014ம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வேடத்தை ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
ஹிந்தி மொழியில் பல வெற்றி படங்களில் நடித்த இவர் தமிழில் வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது இவர் உருவக்கேலி குறித்தும், இதனால் தான் எவ்வாறு பாதிக்கப்பட்டேன் என்பது பற்றியும் மனம் திறந்து பேசியுள்ளார். இதுகுறித்து வித்யா பாலன் பேசுகையில், சிறு வயதிலிருந்தே நான் பருமனான உடலமைப்பை தான் கொண்டிருந்தேன், அதே உடலமைப்போடு தான் நான் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்தேன். சினிமாவிற்கு வந்த புதிதில் அனைவரும் என்னுடைய உடலமைப்பை வைத்து என்னை கேலி செய்ய ஆரம்பித்தார்கள். இதனால் நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன், என்னை நானே வெறுக்க தொடங்கினேன். அதன் பின்னர் தான் நான் உணர தொடங்கினேன் என் உடம்பிற்கு என்ன குறை, நான் ஆரோக்கியமாக தான் இருக்கிறேன் என்று உணர்ந்தேன். அடுத்தவர்களுக்காக மாற வேண்டும் என்று நினைக்காதீர்கள், மற்றவர்கள் சொல்வதை கேட்டு உங்களை நீங்களே வெறுக்காதீர்கள் என்று கூறியுள்ளார்.