மார்கழி மாதம் தொடங்கியதை அடுத்து விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த இளையராஜா அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை வெளியான நிலையில், மறுப்பு தெரிவித்து ஜீயர், இளையராஜா மற்றும் அறநிலையத் துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
அறநிலையத் துறை சார்பில், ஆண்டாள் கோயில் செயல் அலுவலர் சர்க்கரையம்மாள் அளித்த விளக்கம் :-
ஆண்டாள் கோயிலில் டிசம்பர் 15-ம் தேதி ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர், இசையமைப்பாளர் இளையராஜா உடன் சுவாமி தரிசனம் செய்தார். ஆண்டாள் கோயில் கருவரையில் மூலவரும், அர்த்த மண்டத்தில் உற்சவரும் எழுந்தருளியுள்ளனர். எனவே, இத்திருக்கோயில் மரபுபடி அர்த்த மண்டபம் வரை திருக்கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் அனுமதிக்கப்படும் வழக்கமில்லை.
இசையமைப்பாளர் இளையராஜா, ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் உடன் வந்தபோது அவருடன் இணைந்து அர்த்த மண்டப வாசல் படி ஏறியபோது உடன் இருந்த ஜீயர் மற்றும் கோயில் மணியம் ஆகியோர் அர்த்த மண்டபம் முன்பு இருந்து சாமி தரிசனம் செய்யலாம் என கூறிய உடன், அவரும் ஒப்புக் கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு இருந்து சுவாமி தரிசனம் செய்தார். ஜீயர் மட்டும் அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தார் என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் தெரிவித்த விளக்கம் :-
ஆண்டாள் கோயிலில் இளையராஜா அவமதிக்கப்படவில்லை. கோயில் நிர்வாகம் சார்பில் அவருக்கு முழு மரியாதை அளிக்கப்பட்டது. இளையராஜாவும் ஆண்டாள் தாயாரை பக்தியுடன் தரிசனம் செய்து விட்டு, மன நிறைவுடன் சென்றார் என்று தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து இளையராஜா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த விளக்கம் :-
என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளைப் பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல, விட்டுக்கொடுக்கவும் இல்லை. நடக்காத செய்தியை நடந்ததாகப் பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும், மக்களும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.