வருமானத்திருக்கு அதிகமான சொத்து சேர்ப்பு…சிக்கிய விஐபிகளின் தோஸ்த்தான சேலத்து காவேரி! சர்ச்சையில் மாட்டிய முன்னாள் அதிமுக அமைச்சர்கள்!
அதிமுக ஆட்சிக்காலத்தில் சேலத்தில் உள்ள பல செல்வாக்கு உள்ள நபர்களுக்கும் பல கோணங்களில் உதவிய இளநிலை உதவியாளரான காவேரி என்பவர் வீட்டில் விஜிலென்ஸ் போலீசார் நேற்று சோதனை நடத்தியுள்ளனர். இதற்கு முன்னதாகவே கடந்த ஆண்டு இவர் பணிபுரிந்த அலுவலகத்தில் சோதனை செய்ததில் கட்டு கட்டாக பணம் கைப்பற்றப்பட்டது. இது குறித்து கடந்த ஆண்டு சார் பதிவாளராக இருந்த இந்துமதி மற்றும் இது சம்மந்தப்பட்ட மூன்று ப்ரோக்கர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனையடுத்து இவர் வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்துள்ளதாக தற்பொழுது இவர் மீது தொடர் புகார்கள் வந்துள்ளது.
புகாரின் பேரில் சோதனை செய்ததில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இவரது உறவினர்கள் வீட்டிலும் சோதனை செய்துள்ளனர். சேலத்தில் பத்திரப்பதிவு இளநிலை உதவியாளர் காவேரி என்றாலே தெரியாத செல்வந்தர்களே இருக்க முடியாது.சேலத்தில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் இவரிடம் வந்து தான் பத்திரப்பதிவு செய்து கொள்வார்கள். அதேபோல இவரது அலுவலகத்தில் மாவட்ட பதிவாளராக இருந்தாலும் சரி, சார் பதிவாளராக இருந்தாலும் சரி பத்திரப்பதிவு பணியை இவரிடம் தான் கொடுப்பார்கள்.
அந்த அளவிற்கு இவர் விஐபிகளின் மத்தியில் முக்கிய இடத்தை பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி இவரது அலுவலகத்தில் இவர் தனி ஒரு அறையை வைத்துள்ளார். விஐபி களுக்கான பத்திரப்பதிவு எப்பொழுதும் இந்த தனி அறையில் தான் நடக்கும். சொத்து வாங்குதல் கைமாற்றுதல் என அனைத்து சிக்கல்களையும் காவேரி ஒருத்தரே முன்னின்று முடித்து வைப்பார் என விஐபி களின் மத்தியில் காவேரி குறித்து நம்பிக்கை உள்ளது. அந்த வகையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பலருக்கும் இவர் சொத்துக்களை வாங்கிக் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர். இந்த சோதனையின் அடிப்படையில் அவர்கள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.