தொகுதி மாறும் வேட்பாளர்கள்! அதிமுக போட்ட பலே திட்டம்!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனை தொடர்ந்து அதிமுக கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை மற்றும் உடன்பாடு போன்றவற்றில் கையெழுத்து போட்டு இருக்கிறது. தமிழகத்தில் மொத்தம் இருக்கின்ற 234 தொகுதிகளில் 177 தொகுதிகளில் அதிமுக நேரடியாக களமிறங்குகிறது. இந்த நிலையில், நாளை வேட்புமனு தாக்கல் தொடங்க இருக்கிறது.

இது போன்ற சமயத்தில் அதிமுக தன்னுடைய முதல் கட்ட வேட்பாளர் பட்டியலாக ஆறு பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியிட்டு இருந்தது. அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடப்பாடி தொகுதியிலும் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியிலும், அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் தொகுதியிலும், போட்டியிட இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் விழுப்புரம் தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நேற்றைய தினம் அதிமுக சார்பாக தன்னுடைய இரண்டாவது கட்ட வேட்பாளர் பட்டியல் அந்த கட்சியின் தலைமையால் வெளியிடப்பட்டது. அந்த சமயத்தில் தற்சமயம் சட்டசபை உறுப்பினராக இருக்கும் 45நபர்களுக்கு மறுபடியும் வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. முன்னாள் அமைச்சர்கள் 18 நபர்களுக்கு மறுபடியும் அதிமுக சார்பாக போட்டியிடுவதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. தற்சமயம் அமைச்சர்களாக இருக்கும் 28 பேருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இருந்தாலும் அமைச்சர்கள் பாஸ்கரன், நிலோபர் கபில், வளர்மதி, போன்றோருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில், அதிமுகவில் தன்னுடைய தொகுதியை மாற்றிக் கொண்டு போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் தற்சமயம் வெளியாகியிருக்கிறது. 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினை எதிர்த்து நின்ற சைதை துரைசாமி இந்தமுறை சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட இருக்கிறார். சென்றமுறை சிவகாசி தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இம்முறை ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட இருக்கின்றார். மதுரை வடக்கு தொகுதியில் நின்ற ராஜன்செல்லப்பா தற்சமயம் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட இருக்கிறார் என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.