தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. முதலமைச்சர், ஸ்டாலின், கமல் உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் பலரும் நேற்று முன் தினம் வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனுவில் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் குறிப்பிடப்படும் என்பதால், யாருக்கு எத்தனை கோடி சொத்து உள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் இசக்கி சுப்பையாவின் ஆதரவாளர் வீட்டில் நள்ளிரவு முதலே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுக சார்பில் இசக்கி சுப்பையா போட்டியிட உள்ளார். இதற்காக நேற்று அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் 240 கோடி ரூபாய் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து சேரன் மாதேவியில் உள்ள இசக்கி சுப்பையாவின் ஆதரவாளரும், பிரபல தொழிலதிபருமான மாரி செல்வன் வீட்டில் நள்ளிரவில் வருமான வரித்துறையினர், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தினர். வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கப்பட்டிருக்கலாம் என கிடைத்த தகவலின் அடிப்படையில் ரெய்டு நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் மாரி செல்வன் வீட்டில் இருந்து பணம் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.