துணை முதல்வர் ஆகிறாரா சி.வி. சண்முகம் ???
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பிரமாண்ட வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதிமுகவின் சட்ட அமைச்சர் சி.வி . சண்முகம் துணை முதல்வராக நியப்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது.
பொதுவாக அதிமுகவின் அரசியல் தென் தமிழகத்தை மையமாகக் கொண்டும் , திமுகவின் அரசியல் வட தமிழகத்தை மையமாக கொண்டும் தான் இயங்கும். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுக பல பிரிவுகளாக உடையும் , காணாமல் போகும் என அரசியல் நோக்கர்கள் எதிர்பார்த்திருந்த சூழ்நிலையில் தொடர்ந்து தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி தொடர்வது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறது.
இதற்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுவது வட மாவட்டத்தில் மிகப்பெரிய சமூகமான வன்னிய சமூகத்தின் பெரும்பாலான வாக்குகள் அதிமுக பக்கம் சாய்ந்தது தான். பாராளுமன்ற தேர்தலோடு சேர்ந்து 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடைப்பெற்ற இடைத்தேர்தலில் 37/38 பாராளுமன்ற தொகுதிகளில் திமுக வென்ற சூழலிலும், தமிழக சட்டமன்ற ஆட்சி மாற்றத்தை நிர்ணயிக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் 22க்கு 9 தொகுதிகளில் வென்று அதிமுக அரசு ஆட்சியை தக்க வைத்தது.
இந்த 9 தொகுதிகளில் பெரும்பாலானவை வன்னியர் சமூக ஓட்டுக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வட மாவட்ட தொகுதிகள். ஆண்டிப்பட்டி, பெரிய குளம் போன்ற அதிமுகவின் மிக முக்கிய கோட்டைகளையே திமுகவிடம் இழந்த சூழலிலும் பாப்பிரெட்டிப்பட்டி, சோளிங்கர், அரூர் போன்ற திமுகவின் செல்வாக்கு மிக்க தொகுதிகளை அதிமுக வென்றதன் பின்னனியில் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் செயல்பாடுகளே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சமீபத்தில் நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் மாபெரும் வெற்றியைப் பெற்று தந்து வன்னியர் ஓட்டுக்களை வேட்டையாடுவதில் திமுகவுக்கு சிம்ம சொப்பணமாக திகழ்கிறார் .
தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் இருக்கும் 37 மாவட்டங்களில் 22 மாவட்டங்கள் வன்னியர் சமூகத்தைப் பெரும்பான்மை மக்களாகக் கொண்ட மாவட்டங்களாக உள்ளன. இந்த 22 மாவட்டங்களில் குறைந்தது 105 தொகுதிகளில் வெற்றி, தோல்விகளை தீர்மானிக்கும் சக்தியாக வன்னியர் சமூகம் இருப்பதால் அந்த சமூகத்தை கவரும் நோக்கில் சி.வி. சண்முகத்திற்கு துணை முதல்வர் பதவி தரப்பட இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது.
அண்டை மாநிலமான ஆந்திராவில் 5 துணை முதல்வர்கள் இருக்கும் போது இங்கே நிர்வாக வசதிக்காக 2 துணை முதல்வர்கள் இருப்பது எந்த விதத்திலும் தவறில்லை என்கிறார்கள் வட மாவட்ட கழக பொறுப்பாளர்கள்.