கோவை பயணத்தில் அதிமுகவிலிருந்து அடுத்த விக்கெட்டை தூக்கிய ஸ்டாலின்
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் கோயம்பத்தூர்,திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.இந்த சுற்றுப்பயணத்தின் போது முடிவடைந்த அரசு திட்டங்களை தொடங்கி வைப்பது,மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது மற்றும் கட்சி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவகைகளில் கலந்து கொள்கிறார்.
இதற்காக விமானம் மூலமாக கோவை வந்தடைந்த அவருக்கு திமுகவினர் பலத்த வரவேற்பை கொடுத்தனர்.அதனைத்தொடர்ந்து இன்று நடந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதனைத்தொடர்ந்து இன்று மாலை நடக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில்பாலாஜி முயற்சியால் அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகளிலிருந்து 1000 க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
கோவை மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜியை முதல்வர் ஸ்டாலின் நியமனம் செய்துள்ளார். இதன் மூலமாக அரசின் நலத்திட்டங்கள், வளர்ச்சி பணிகளை கண்காணிக்கும் பொறுப்புடன் கட்சியை வளர்க்கும் பணியையும் அவருக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
அந்தவகையில் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பு அமைச்சர் பணியை சிறப்பாக செய்து வரும் அமைச்சர் செந்தில் பாலாஜி கட்சியை பலப்படுத்தும் பணியிலும் சிறப்பாக செயல்படுகிறார்.அதன் அடிப்படியில் அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், மக்கள் நீதி மய்யம் மகேந்திரன் உள்ளிட்டோரை திமுகவில் இணைய வைத்து கொங்கு மண்டத்தில் திமுகவை வலுப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில், முதல்வர் ஸ்டாலினின் பயணத்தின் படி இன்று கோவையில் நடைபெறும் திமுக நிகழ்ச்சியில் அதிமுக மற்றும் பாஜகவிலிருந்து 5,000 க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், முக்கியமாக அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.சி.ஆறுகுட்டியும் திமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இவர் கடந்த 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தொடர்ந்து இருமுறை சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார்.கோவை மாவட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
கடந்த சில மாதங்களாக கட்சியின் செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கிருந்த ஆறுகுட்டி சமீபத்தில் அதிமுகவில் நடக்கும் உட்கட்சி பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்து சர்ச்சையை கிளப்பினார்.கடந்த ஜூன் மாதம் 17-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அவர் ஓபிஎஸ் – இபிஎஸ் செயல்பாடு குறித்து விமர்சித்து பேசியிருந்தார்.
அப்போது பேசிய அவர் “ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செய்வது சரியல்ல. ஜெயலலிதா இருந்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது. ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு பதிலாக வேறு யாராவது அதிமுக பொதுச்செயலாளராக வந்தால் நன்றாக இருக்கும். அதிமுகவை சாதிக்கட்சி போல் மாற்ற வேண்டாம் என்றெல்லாம் பேசி அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இதனைத்தொடர்ந்து அதிமுகவில் மேலும் தனக்கு செல்வாக்கு இருக்காது என உணர்ந்த அவர் திமுகவில் இணைய ஆர்வம் காட்டியுள்ளதாகவும்,சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்தித்த இவர் இது குறித்து பேசியுள்ளதாகவும் தகவல்கள் கசிந்தது.அந்த வகையில் இன்று மாலை திமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஸ்டாலின் முன்னிலையில் ஆறுகுட்டி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைவதாக தகவல் வெளியாகியுள்ளது.