மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் சட்டசபைகளில் மக்கள் பிரச்சனைகளை பேசுகிறார்களோ இல்லையோ தங்களின் சுய தம்மட்டம் மற்றும் தற்பெருமைகளை அதிகம் பேசுவது அதிகரித்துவிட்டது. அதிலும் சிலர் பன்ச் வசனங்களையெல்லாம் சொல்லி மற்ற எம்.எல்.ஏக்களை சிரிக்க வைப்பார்கள். கலைஞர் கருணாநிதி இருந்தவரை அதிமுகவை கடுமையாக விமர்சித்து வந்தார். எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதிலிருந்தே அவரின் கேள்விகளில் அனல் பறக்கும்.
எனவே கலைஞர் கருணாநிதி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபையில் அமர்ந்து கேள்விகளை எழுப்ப வேண்டும் என எம்.ஜி.ஆரே ஆசைப்படுவார். அதேபோல், மறைந்த முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இருக்கும்போதும் அனல் பறக்கும் விவாதங்கள் நடக்கும். விஜயகாந்த் எதிர்கட்சி தலைவராக இருந்த போது அவர் நாக்கை துறுத்தி அதிமுக எம்.எல்.ஏக்களிடம் சண்டை போட்டதெல்லாம் சட்டசபையில்தான் நடந்தது.

சரி விஷயத்திற்கு வருவோம். இன்று காலை சட்டசபையில் மக்கள் பிரச்சனைகள் பற்றி பேசிக்கொண்டிருந்த போது அதிமுக உறுப்பினர் கடம்பூர் ராஜூ ‘அதிமுக என்ற கட்சியே கணக்கு கேட்டதால் ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான். 2026-ல் முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து எங்கள் கணக்கை தொடங்குவோம்’ என திமுகவினரை பார்த்து சொன்னார்.
அதற்கு பதிலடி கொடுத்த திமுக நிதியமைச்சர் தென்னரசு ‘நீங்கள் சொல்வது சரிதான். ஆனால், இப்போது நீங்கள் தப்பு கணக்கு போடுகிறீர்கள்’ என சொன்னார். அப்போது எழுந்து பேசிய அதிமுக உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி ‘எடப்பாடி போட்ட கணக்கு சரியாகத்தான் இருக்கும். கூட்டி கழிச்சி பார்த்தால் கணக்கு சரியாக இருக்கும்’ என பேச அவையில் இருந்த எல்லோரும் சிரித்தார்கள்.
தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து விட்டு வந்ததைத்தான் வேலுமணி குறிப்பிட்டிருக்கிறார் என நாம் புரிந்துகொள்ள வேண்டும்.