அடகு வைத்த நகையும்! இட ஒதுக்கீடு வலையும்? ஸ்டாலினை வச்சு செய்த நமது அம்மா நாளிதழ்

Photo of author

By Anand

அடகு வைத்த நகையும்! இட ஒதுக்கீடு வலையும்? ஸ்டாலினை வச்சு செய்த நமது அம்மா நாளிதழ்

தேர்தல் வந்தால் மக்களை ஜாதி கூறுகளாக பார்த்து நாக்கிலே பசை தடவி பூச்சி பிடிக்கிற வேலையை திமுக வெட்கம் இல்லாமல் செய்வதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது அம்மா விமர்சித்துள்ளது. ஜெயலலிதா இருந்தவரை டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.தான் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக இருந்தது. அவர் மறைவுக்கு பிறகு நடந்த அரசியல் கலாட்டாவில் நமது அம்மா என்ற நாளிதழ் அதிமுகவுக்காக தொடங்கப்பட்டது. அதற்கு மருது அழகுராஜ் என்பவர் ஆசிரியராக உள்ளார். ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். கருத்துக்களை கவிதை நடையாகவும் , தலையங்கம் வழியாகவும் நமது அம்மா நாளிதழ் வெளியிடுவது வழக்கம்.

அந்த வகையில் இன்று அடகு வைத்த நகையும், இட ஒதுக்கீடு வலையும் ;என்ற தலைப்பில் நமது அம்மாவில் ஒரு விமர்சனம் வெளியாகியுள்ளது. அதில், வாக்குறுதியை நிறைவேற்ற வாய்ப்பு இருக்கிறதா என்பதை ஒரு கணமும் யோசிக்காமல் அள்ளிவிடுவது, ஆசை வலை விரிப்பது மதிகெட்ட திமுகவுக்கு தேர்தல் விதியாகவே போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் அடகுவைத்த 5 சவரன் நகையை திருப்பி தருவோம், மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்வோம், கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன்களை ரத்து செய்வோம் என அள்ளிவிட்ட பொய்களை என்னாச்சு என மக்கள் கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில், திருவாளர் துண்டுச்சீட்டு இட ஒதுக்கீடு என்ற புதிய வலையை விரிக்க பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் எடுத்துவிடும் புளுகுகளை நம்ப தமிழக மக்கள் ஒன்றும் பித்து பிடித்து போகவில்லை என்றும், திமுக ஆட்சிக்கு வர வேண்டாம் என்பதில் மக்கள் தெளிவாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட கட்சி தலைமைகள் கட்சி நாளேடு வாயிலாக எதிர்க்கட்சிகள் பற்றி கடும் விமர்சனத்தை முன்வைப்பது குறிப்பிடத்தக்கது.