ஒரு கைதியை அமைச்சராக வைத்திருக்க சட்டமிருக்கா? திமுகவை பங்கம் செய்த செம்மலை

Photo of author

By Anand

ஒரு கைதியை அமைச்சராக வைத்திருக்க சட்டமிருக்கா? திமுகவை பங்கம் செய்த செம்மலை

ஒரு அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறுகின்றனர்.ஆனால் ஒரு கைதியை அமைச்சராக வைத்திருப்பதற்கு சட்டத்தில் இடமிருக்கா என்பதை கூற வேண்டும் என அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார்.

தமிழக மின்சாரத்துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி சமீபத்தில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.அப்போது அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் எப்படி அமைச்சராக தொடரலாம் என சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுந்தது.எதிர்க்கட்சிகளும் இது குறித்து விவாதங்களை கிளப்பின.

இதனைத்தொடர்ந்து செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் ரவி அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.இது குறித்த கடிதத்தையும் தமிழக அரசுக்கு அனுப்பியதாக செய்திகள் வெளியாகின. இதனையடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின்,சபாநாயகர் அப்பாவு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆளுநருக்கு அமைச்சரை நீக்கி அதிகாரம் இல்லை என்று தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் பதவியிலிருந்து செந்தில் பாலாஜியை நீக்குவதற்கு பிறப்பித்த உத்தரவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.இது திமுகவினருக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.

இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செம்மலை ‘ஒரு அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று கூறுபவர்கள் ஒரு கைதியை அமைச்சராக வைத்திருப்பதற்கு சட்டத்தில் இடமிருக்கா என்பதை கூற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.