தமிழக சட்டப்பேரவையில் அதிமுகவினரின் கேள்விக்கு பதில் அளித்த வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி அவர்கள் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாக விற்பனை செய்ய அனுமதி கிடையாது என தெரிவித்திருக்கிறார்.
தற்பொழுது தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கலை தொடர்ந்து கேள்வி நேரங்களும் ஒதுக்கப்பட்டு வருகிறது. இப்படி ஒதுக்கப்பட்ட கேள்வி நேரத்தில் அதிமுக உறுப்பினா் எம்.ராஜமுத்து வீரபாண்டி அவர்கள் நில வழிகாட்டி அளவானது அதிமுக இருந்த பொழுது 33 சதவீதம் குறைக்கப்பட்டது என்றும் ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு 33 சதவீதம் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது என்றும் தெரிவித்ததோடு, 3 ஏக்கர் நிலங்களை அதாவது விவசாய நிலங்களை வைத்திருக்கக்கூடிய விவசாயிகள் தங்களுடைய நிலங்களில் இருந்து 5 , 10 செண்டுகளை வீட்டுமனைகளாக பத்திரப்பதிவு செய்வதற்காக சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லும் பொழுது அதற்கான விலையை அவர்களே நிர்ணயிக்கிறார்கள் என்றும் இதனால் விவசாயிகள் சிரமப்படுகிறார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு பதிலளித்த வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சா் பி.மூா்த்தி தெரிவித்திருப்பதாவது :-
விவசாய நிலங்களை பிரித்து வீட்டு மனைகளாக மாற்றிக்கொள்ள முடியாது என்றும் அதற்கான முறையான வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியம் எனவும் தெரிவித்தார். மேலும் 2012 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்த பொழுது என்ன விதிமுறைகளை பின்பற்றியதோ அதைத்தான் தற்பொழுது திமுக அரசும் பின்பற்றுகிறது என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
மேலும், பொது மக்களின் நலனுக்காக கிராம நத்தமாக இருக்கக்கூடிய பகுதிகளில் உள்ள நிலங்களை எந்த மாற்றமும் இல்லாமல் பதிவு செய்து கொடுப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். அதிலும் குறிப்பாக திமுக அரசு சட்ட திட்டங்களை பின்பற்றியே நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றுவதை கருத்துடன் கண்காணித்து பணியாற்றிய வருவதாகவும் கூறியிருக்கிறார்.