கிளைமேக்ஸை நெருங்கிய அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்!
அதிமுகவில் நிரந்தர பொதுசெயலாளராக இருந்தவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இவரது மறைவிற்கு பின் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே கட்சியில் யார் மூத்தவர்கள் என்ற போட்டி நிலவிய போது, ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸையும், கட்சியின் பொதுகுழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தனர்.
அதிமுகவில் முதல்முறையாக இரட்டை தலைமை ஏற்படுத்தப்பட்டது இதுவே முதல் முறை என்றாலும், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே சில மன சங்கடங்கள் உறுவாகியதன் காரணமாக பல்வேறு பிரச்சனைகளை கட்சி ரீதியாக இருவரும் சந்தித்தனர்.
இதனிடையே கடந்த சட்டமன்ற தேர்தலின் போது அதிமுக சார்பில் வேட்பாளர்களை அறிவிப்பதிலும் இருவரும் முட்டி மோதிய நிலைமை உருவாகியது, எனினும் இதில் இபிஎஸ்ஸின் கையே ஓங்கியது. தேர்தலில் தோல்வி அடைந்த பின்னர் ஓபிஎஸ் அணியினர், தேர்தல் தோல்விக்கு இபிஎஸ் தான் காரணம் என கூறிவந்தனர்.
இந்நிலையில் கட்சிக்குள் ஒற்றை தலைமை பிரச்சினை உருவெடுக்க தொடங்கியதும், அதிலும் இபிஎஸ்ஸின் கையே ஓங்கியது. இதனை சிறிதும் பொருத்து கொள்ளாத ஓபிஎஸ் அணியினர் பல சந்தர்ப்பங்களில் இபிஎஸ்க்கு கட்சிரீதியாக குடைச்சல் தர தொடங்கினர். இதனையும் வெற்றிகரமாக சமாளித்த இபிஎஸ், தனது ஆதரவாளர்களுடன் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி பொதுக்குழுவை கூட்டி, 95 சதவித பொதுகுழு உறுப்பினர்கள் ஆதரவுடன் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுகப்பட்டார்.
இபிஎஸ் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பு பல முறை சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தும், இபிஎஸ் கூட்டிய பொதுக்குழு செல்லும் என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவையடுத்து, எதுவும் செய்ய முடியாமல் கையை பிசைந்து கொண்டு நின்றனர் ஓபிஎஸ் தரப்பினர்.
இதனிடையே நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்ததை அடுத்து, அதிமுகவின் அடுத்த பொது செயலாளராக இபிஎஸ்ஸை தேர்ந்தெடுக்கும் வேலைகளில் அவரது ஆதரவாளர்கள் அதற்கான வேலைகளை மும்முரமாக செய்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக இபிஎஸ் கையெழுத்திட்ட தற்காலிக உறுப்பினர் அடையாள அட்டையை மாவட்ட ரீதியாக தற்போது விநியோகித்து வருகின்றனர்.
அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுசெயலாளர் தேர்தலுக்கான வேலைகளை முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டு, இன்று முதல் பொது செயலாளர் வேட்பாளருக்கான மனுவை வழங்கவுள்ளனர். மேலும் எடப்பாடியை எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பில்லை என்பதால், ஜெயலலிதாவிற்கு அடுத்தபடியாக எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொது செயலாளராக நியமிக்கபடுவது கிட்டதட்ட 99சதவிதம் உறுதியாகியுள்ளது.
எது எப்படியோ ஓபிஎஸ் போட்ட தடைகளை தாண்டி அதிமுக என்னும் மாபெரும் அரசியல் இயக்கத்தின் பொது செயலாளர் பதவியின் சிம்மாசனத்தில் எடப்பாடி பழனிசாமி அமர்வதற்கு அவர் வகுத்த திட்டங்கள் அவருக்கு கை கொடுத்து, திரைப்படங்களில் வரும் கிளைமேக்ஸை காட்சியில் ஏற்படும் பரபரப்பை போல உள்ளது.