உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பானது சாதாரன மக்கள் முதல் பெரிய தலைவர்கள் வரை எந்த பாகுபாடும் இல்லாமல் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் கொரோனா பாதிப்பால் சமீபத்தில் உயிரிழந்தார் . இதனையடுத்து ஆளும் அதிமுகவின் உயர்கல்வித்துறை அமைச்சர் K.P அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது .இதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் வேறொரு அமைச்சருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் பாதிப்பானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் தற்போது வரையில் 1 லட்சத்து 19 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,500க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையியல் பொதுமக்களுக்கு கடும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், காவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது.
இதே போல தான் தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில் களத்தில் இறங்கி பணியாற்றி வரும் ஆளும் அதிமுக அமைச்சர்கள்,அதிமுக மற்றும் திமுக எம்எல்ஏக்களும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மற்றும் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது.
நேற்று தமிழக முதல்வர் பங்கேற்ற நிகழ்ச்சியில் காணொளி காட்சியின் வாயிலாக கலந்து கொண்ட அமைச்சர் தங்கமணி, இன்று தனியார் மருத்துவமனையில் பொது பரிசோதனை மேற்கொண்டார். அப்போது, அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.