தள்ளிப்போகும் அஜித்தின் ‘விடாமுயற்சி’ – காரணம் ரஜினியா ?
நடிகர் அஜித் சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. காரணம், அவரது காதுக்கு கீழே இருந்த நரம்பின் வீக்கம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தான். சிகிச்சை முடிந்து சில தினங்களில் அஜித் வீடு திரும்பினார். எனினும், அவருக்கு ஓய்வு தேவை என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் அவர் தற்போது ஓய்வு எடுத்து வருகிறார்.
நடிகர் அஜித் தற்போது மகிழ்திருமேணி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் த்ரிஷா, சஞ்சய்தத், அர்ஜுன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். 50% படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இன்னமும் 35 நாட்கள் படப்பிடிப்பு மீதமுள்ளது என்று கூறப்படுகிறது. இப்படத்தில் ஆக்க்ஷன் மற்றும் இமோஷன் இரண்டும் கலந்து காட்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படத்தினை லைகா நிறுவனமே தயாரிக்கிறது.
‘வேட்டையன்’ படத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் லைகா
லைகா நிறுவனம் தற்போது தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களை தயாரித்து வருகிறது. ரஜினியின் ‘வேட்டையன்’, கமலின் ‘இந்தியன் 2’, ‘இந்தியன் 3’, மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெளியான ‘லூசிபர்’ படத்தின் 2ம் பாகமான ‘எம்புரான்’ என தொடர்ந்து பெரிய படங்களை தயாரிக்கிறது. இந்நிலையில், ‘இந்தியன் 2’ திரைப்பட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், ரஜினியின் ‘வேட்டையன்’ திரைப்படம் இன்னும் 25% படப்பிடிப்பு மீதமுள்ளதாம். அதனை எடுத்து முடித்த பின்னர் அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்பட படப்பிடிப்பினை தொடரலாம் என்று லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. ‘வேட்டையன்’ படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாத இறுதியில் நிறைவடையும் பட்சத்தில். அதற்கு பிறகே ‘விடாமுயற்சி’ திரைப்பட படப்பிடிப்பு துவங்கும்.
இதற்கிடையே, அஜித் தனது அடுத்த படத்தினை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்னும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும், அஜித் எப்போதும் தான் நடித்து கொண்டிருக்கும் படத்தினை முடித்த பின்னரே அடுத்த படத்தில் நடிக்க துவங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.