“பூம்ரா வந்தாலும் எதுவும் மாறாது… இந்திய அணி ரொம்ப வீக்காக உள்ளது” ஆகாஷ் சோப்ரா கருத்து
இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ளதாக வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இந்திய அணி சில தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 208 ரன்கள் சேர்த்தும், அந்த இலக்கை வைத்து வெற்றிப் பெற முடியாமல் கோட்டை விட்டது. இதனால் இந்திய அணியின் பவுலிங் மற்றும் பீல்டிங் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இந்திய அணியில் பும்ரா இல்லாதது மிகப்பெரிய பலவீனமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நாளை நடக்க உள்ள இரண்டாவது போட்டியில் இந்திய அணியில் பூம்ரா இடம்பெறுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா பூம்ரா வருவதால் இந்திய அணியில் எதுவும் மாறிவிடாது எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் “ஒரு பவுலர் உள்ளே வருவதால் அணியில் பெரிதாக எந்த மாற்றமும் நடக்காது. அவர் ஐந்து அல்லது ஆறு விக்கெட்களை வீழ்த்தினால்தான். பூம்ரா இருந்துதான் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி மிக மோசமாக தோல்வி அடைந்தது. இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக உள்ளது. இபப்டி ஒரு பந்துவீச்சு தாக்குதலை வைத்துக் கொண்டு உலகக்கோப்பையை வெல்ல முடியாது. இனிவரும் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வென்றே தீரவேண்டும். இல்லையென்றால் முக்கிய வீரர்கள் இலலாத அணியிடம் தோற்றோம் என்ற சூழல் உருவாகிவிடும்” என எச்சரிக்கும் விதமாகக் கூறியுள்ளார்.