இந்திய திரைப்பட நிறுவனத்தின் தலைவரானார் ‘அலைபாயுதே’ மாதவன்!!

0
30

இந்திய திரைப்பட நிறுவனத்தின் தலைவரானார் ‘அலைபாயுதே’ மாதவன்!!

தமிழ் திரையுலகில் வளர்ந்த நடிகர்களில் ஒருவராக உள்ளார் மாதவன்.இவர் கடந்த 2000 ஆம் ஆண்டில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஹீரோவாக அறிமுகமானார்.இதனை தொடர்ந்து தமிழில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் நடிப்பைத் தாண்டி எழுத்தாளர்,படத்தயாரிப்பாளர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவராக இருக்கிறார்.

இந்நிலையில் புனேவில் இருக்கின்ற இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (எஃப்டிஐஐ) தலைவர் பதவிக்கு மாதவன் அவர்கள் தேர்வாகி இருக்கிறார்.இந்த எஃப்டிஐஐ நிறுவனம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நிலையில் இத்துறையின் அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்த அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,”இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் நடிகர் மாதவனுக்கு வாழ்த்துக்கள். உங்களின் அனுபவம் மற்றும் கடுமையான தொழில்தர்மம் இந்த நிறுவனத்துக்கு பயன்படும் என்பதை உறுதியாக நம்புகிறேன். உங்களின் அனுபவம் நல்லபடியான மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, நிறுவனத்தை மேலும் உயரத்துக்கு கொண்டு செல்லும்” என்று குறிப்பிட்டுள்ளார்.இதனை தொடர்ந்து மாதவன் அவர்கள் அனுராக் தாக்கூர் அவர்களின் பதிவிற்கு “உங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி. எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் எனது சிறப்பான உழைப்பை கொடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகர் மாதவன் இயக்கி நடித்த ‘ராக்கெட்ரி: நம்பி விளைவு’ திரைப்படம் சமீபத்தில் நடைபெற்ற 69 வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.