முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் உண்மையாக வாழ்ந்து இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
நடிகர் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் அமரன். ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்து ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். நேற்று திரையரங்கில் வெளியாகி உள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயனும், சாய் பல்லவியும் தங்களது அற்புதமான நடிப்பை தந்துள்ளனர். உலகெங்கும் சுமார் 900க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் நேற்று வெளியாக்கியுள்ளது.
புல்வாமா தாக்குதலை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. சிறுவயதிலிருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் மேஜர் முகுந்த் வரதராஜன் தனது ஜூனியரான இந்துவை காதலிக்கிறார். காதலுடன் ராணுவத்தில் சேர வேண்டும் என்ற வெறியோடு ராணுவ பயிற்சியில் முழு வீச்சாக ஈடுபட்டு ராணுவத்தில் சேர்ந்து விடுகிறார். ராணுவ வீரர் என்பதால் முதலில் இந்துவின் வீட்டில் திருமணத்திற்கு சம்மதம் கிடைக்கவில்லை. பிறகு எப்படியோ போராடி இந்து- முகுந்த் திருமணம் நடைபெறுகிறது. முதல் பாதி காதல், ராணுவத்தில் சேருதல், காதலுக்கு எதிர்ப்பு, என எமோஷனலாக நகரும் திரைக்கதை இடைவேளைக்கு பின் சற்று சூடு பிடிக்கிறது.
முதலில் லெப்டினென்ட் ஆக சேரும் முகுந்த், கேப்டனாக பதவி உயர்வு பெறுகிறார். அதன் பின்னர் 44 ராஷ்ட்ரிய ரைப்பில்ஸ் சீட்டா கம்பெனியில் மேஜராக பொறுப்பு வகிக்கிறார். இந்த சூழ்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறும் கிளர்ச்சிக்கும், கொடூர தாக்குதல்களுக்கும் முக்கிய காரணமாக இருக்கும் குற்றவாளியை முகுந்த் போட்டு தள்ளுகிறார்.
அவனுக்குப் பின் அந்த இடத்திற்கு வரும் குற்றவாளியின் தம்பி ஜம்முவில் இருக்கும் இந்திய ராணுவ படையினரை அழிக்க திட்டம் தீட்டுகிறார். அவனின் திட்டம் வெற்றி பெற்றதா?? மேஜர் முகுந்த் எப்படி இருந்தார் என்பதை அழுத்தமாகவும் உயிரோட்டமாகவும் கண்முன்னே காட்டி உள்ளது இந்தத் திரைப்படம்.
மேஜர் முகுந்த் வரதராஜன் ஆக கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருக்கிறார் சிவகார்த்திகேயன். ஆக்சன் மற்றும் துப்பாக்கி சண்டை காட்சிகள் படம் பார்ப்பவர்களை உண்மையான போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு துப்பாக்கி சத்தம் கேட்கும் போது மனம் பதைபதைக்கிறது. படத்தின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ராணுவ வீரரின் குணத்தை தனது உடல் மொழியின் வழியாக காட்டி மேஜர் முகுந்து வரதராஜனாகவே வாழ்ந்து உள்ளார் சிவகார்த்திகேயன்.
இவரே இப்படி என்றால் மறுபுறம் அவரை மிஞ்சும் அளவிற்கு இந்துவாக அனைவரின் மனதிலும் இடம் பிடித்துள்ளார் சாய்பல்லவி. அவர் நடிக்கவில்லை நிஜமாக வாழ்ந்தே உள்ளார் என்பது படத்தை பார்க்கும் ஒவ்வொருவர் மனதிலும் தோன்றும். கணவனை பிரிந்து இருந்தாலும் ஆபத்து நேரும்போதெல்லாம் அழும் இவர், கணவனின் இறப்பிற்கு பிறகு வலிமையாக இருந்து தாங்கிக் கொள்வது கட்டாயம் பார்ப்பவர்கள் மனதை ரணமாக்கும்.
கணவன் மனைவி பிரிந்து இருந்தாலும் மனதால் சேர்ந்து இருப்பது, தீவிரவாதிகளின் தாக்குதல்களால் நிலைகுலைந்து போகும் ராணுவம், மக்களை காப்பாற்ற ஹீரோ எடுக்கும் முடிவு என திரைக்கதை வேகமாக நகர்வது இதன் மிகப்பெரும் பலம்.
அமரன் படம் உண்மை சம்பவங்களை தழுவி எழுதப்பட்டது என்றாலும் சீக்கிரம் படம் முடிந்து விடக்கூடாது என நம்மை அனைவரையும் நினைக்க வைக்கிறது. சிவகார்த்திகேயனுக்கு அடுத்தபடியாக ராணுவ வீரர்களாக வரும் வகிப், விக்ரம் சிங் ஆகியோர் மனதில் பதிந்து விட்டனர்.
அடுத்ததாக படத்தின் மிகப்பெரும் பலம் ஜிவி பிரகாஷ் குமாரின் இசை அமைப்பு. பாடல்களிலும் சரி, போர்க்களத்தின் காட்சிகளை கண்முன் நிறுத்துவதிலும் சரி மிரட்டி இருக்கிறார். கூடவே ஒளிப்பதிவாளர் சி.எச்.சாய் தனது பங்களிப்பை சரிவர செய்துள்ளார்.
நீண்ட நாட்களுக்குப் பின்னராக நாட்டின் பாதுகாப்புக்காக தனது உயிரை தியாகம் செய்த ஒரு ஒரு மாபெரும் ராணுவ வீரரின் கதையை கண்முன் கொண்டு வந்துள்ளனர். நாட்டுப்பற்று மிக்க ஒரு நல்ல படத்தை பார்க்க நினைத்தால் கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று பார்க்கலாம். மனைவியின் மீது வைத்த காதல் மட்டும் இல்லை நாட்டின் மீதும்மேஜர் முகுந்த் வரதராஜன் வைத்திருந்த நேசத்தை நமது நெஞ்சில் பதிய வைத்துள்ளார் ராஜ்குமார் பெரியசாமி.
மொத்தத்தில் அமரன் கதை அல்ல. ஒரு உயிரோட்டமான காவியம்.