லட்சங்களில் குவியும் வருமானம்.. கழுதைப்பால் விற்பனையில் அசத்தும் இளைஞர்..!!

0
274
Amazing youth selling donkey milk
Amazing youth selling donkey milk

லட்சங்களில் குவியும் வருமானம்.. கழுதைப்பால் விற்பனையில் அசத்தும் இளைஞர்..!!

பள்ளி அல்லது கல்லூரிகளில் சரியாக படிக்காத மாணவர்களை நீயெல்லாம் கழுதை மேய்க்க தான் லாயக்கு என ஆசிரியர்கள் திட்டுவார்கள். ஏன் நாம் கூட இப்படி திட்டு வாங்கி இருப்போம். ஆனால் அதையே ஒரு தொழிலாக தொடங்கி மாதம் கை நிறைய சம்பாதித்து இளைஞர் ஒருவர் அசத்தி வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா?

அட உண்மைதாங்க குஜராத் மாநிலம் படோன் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் தீரேன் சோலங்கி அரசாங்க வேலை தேடி வந்துள்ளார். ஆனால் அவருக்கு சில தனியார் நிறுவனங்கள் தான் வேலை அளித்துள்ளன. இருப்பினும் அந்த வருமானம் போதுமானதாக இல்லையாம். அந்த சமயத்தில் தான் தென்னிந்தியாவில் கழுதை வளர்ப்பு குறித்து அறிந்த தீரேன் அதுகுறித்து சிலரிடம் ஆலோசனை பெற்றுள்ளார்.

அதன்பின்னர் 8 மாதங்களுக்கு முன்பு தான் அவரின் கிராமத்தில் இந்த கழுதைப்பண்ணையை தொடங்கியுள்ளார். கிட்டத்தட்ட 42 கழுதைகள் கொண்ட இந்த பண்ணையில் இருந்து மட்டும் மாதத்திற்கு சுமார் 2 முதல் 3 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கிறதாம். ஆரம்பத்தில் 20 கழுதைகளுடன் தொழிலை தொடங்கிய தீரேனுக்கு பெரிதாக வியாபாரம் இல்லையாம். ஏனெனில் குஜராத்தில் கழுதைப்பாலுக்கு கிராக்கி இல்லாமல் இருந்துள்ளது.

அதன்பின்னர் தென்னிந்திய நிறுவனங்களை அணுகிய தீரேன் தற்போது கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு கழுதைப்பாலை விநியோகம் செய்து வருகிறாராம். ஒரு லிட்டர் கழுதைப்பால் சுமார் 5000 முதல் 7000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறதாம். இதுவரை தனது சொந்த உழைப்பு மூலம் இந்த தொழிலில் 38 லட்ச ரூபாய் முதலீடு செய்துள்ள தீரேன் அரசிடம் இருந்து எந்தவொரு உதவியும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Previous article3 ஆண்டுகளில் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 5 லட்சம் பேரை வேலைக்கு அமர்த்தலாம்: அரசு தரப்பு தகவல் 
Next articleஅதிரடியாக களத்தில் இறங்கிய சசிகலா.. தொண்டர்களுக்கு பறந்த அறிவிப்பால் ஷாக்கான ஈபிஎஸ்..!!