உலக நாடுகள் அனைத்தும் கொரோனா அச்சுறுத்தலால் முடங்கிப் போயுள்ளது, இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து நாடுகளும் மருத்துவ மற்றும் அத்தியாவசிய செலவுகளை மட்டுமே செய்து வருகிறது.
கொரோனாவுக்கு எதிரான இந்த போரில் உலக நாடுகள் அனைத்தும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் நம்பி போராடி வருகிறது. தங்கள் உயிரையே பனையம் வைத்து மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை பணியாற்றி வருவதால் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க அனைத்து முயற்சியும் எடுக்கப்படுகின்றன.
சீனாவிலுள்ள அமெரிக்க நிறுவனம் ஒன்றிற்க்கு ஜெர்மனி நாடு முகக்கவசம் உள்ளிட்ட பல மருத்துவ உபகரணங்களை தயாரிக்க ஆர்டர் வழங்கியிருந்தது. சீனாவில் தயாரிக்கப்படும் இந்த உபகரணங்கள் தாய்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து கப்பல் மூலமாக ஜெர்மனிக்கு எடுத்து செல்ல திட்டமிடப்பட்டது.
இதற்கிடையில் அமெரிக்காவில் வைரஸ் தொற்று அதிகமாகி இதுவரை 3,67,004 பேர் பாதிக்கப்பட்டு, அதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர். இவர்களுக்காக பணியாற்றி வரும் மருத்துவ ஊழியர்களுக்கு முகக்கவசம், கையுறை போன்ற உபகரணங்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்த தட்டுப்பாட்டை சரிசெய்ய அமெரிக்கா தங்கள் நாட்டு நிறுவனங்களுக்கு மருத்துவ உபகரணங்களை அதிக அளவில் தயாரிக்க உத்தரவிட்டது. பல்வேறு நிறுவனங்கள் அதன் உற்பத்தியில் இறங்கினாலும் தட்டுப்பாடு குறையாத நிலையில் அந்நாட்டில் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகியது.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தங்கள் நாட்டு நிறுவனங்களுக்கு அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் உலகெங்குமுள்ள அமெரிக்க நிறுவனங்கள் தயாரிக்கும் மருத்துவ உபகரணங்களை மற்ற நாடுகளுக்கு விற்கக்கூடாது என்று அதில் கூறப்பட்டது.
இவ்வாறான சூழலில் ஏற்கனவே சீனாவில் இருந்து ஜெர்மனி செல்ல தயாராக இருந்த மருத்துவ உபகரணங்கள் அமெரிக்க தூதரகத்தால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் தயார் நிலையில் உள்ள அந்த மருத்துவ உபகரணங்களை அமெரிக்கா கொண்டு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
அந்நிறுவனத்தில் இருந்து ஜெர்மனி, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கப்பட வேண்டியதை தடுத்து நிறுத்தியதால் அந்த நாடுகள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளது. இதனை பார்த்த அரசியல் நோக்கர்கள் அமெரிக்காவின் இச்செயல் மற்ற நாடுகளுக்கு எதிரான நூதன கொள்ளை என்று கூறி வருகின்றனர்.