Sengottaiyan: ஜெயலலிதா மறைவுக்கு பின் முதல்வர் பதவி ஓ.பன்னீர் செல்வத்துக்கு போய் பின் அது பிடுங்கப்பட்டு பழனிச்சாமி முதல்வர் ஆக்கப்பட்டார். கூவத்தூர் விடுதியில் சசிகலா தயவில் முதலமைச்சராக மாறினார் பழனிச்சாமி. ஆனால், முதல்வரான பின் ஓபிஎஸ். சசிகலா, டிடிவி தினகரன் என எல்லோருக்கும் கட்டம் கட்டினார் பழனிச்சாமி.
சசிகலா சிறைக்கு சென்றுவிட பழனிச்சாமி அதிமுகவில் முழு அதிகாரத்தை கைப்பற்றினார். இப்போது அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியையும் கைப்பற்றி ஆட்சி, கட்சி என இரண்டையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். பழனிச்சாமிக்கு பல வகைகளிலும் பாஜக உதவியதால் நன்றி விசுவாசத்திற்காக 2021 சட்டமன்ற தேர்தல் மற்றும் அடுத்து வந்த பாரளுமன்ற தேர்தல் ஆகியவைகளில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தார். ஆனால், அந்த இரண்டு தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்தது.
பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மையின் ஒட்டுகள் மொத்தமாக திமுக சென்றுவிட்டது. இதனால்தான் நாங்கள் தோற்றோம் என அதிமுக சொன்னது. அதோடு, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்தும் அதிமுக வெளியேறியது. பாஜகவுடன் இனிமேல் கூட்டணி இல்லை.. அதேபோல் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோருடனுன் இணக்கமாக செல்ல முடியாது என தொடர்ந்து செல்லி வந்தார் பழனிச்சாமி.
ஆனால், திமுகவை வீழ்த்த வேண்டுமெனில் அதிமுக, பாஜக, ஒபிஎஸ் மற்றும் சசிகலா தரப்பு என எல்லாம் ஒன்று சேர வேண்டும் என்பதே அமித்ஷாவின் எண்ணமாக இருக்கிறது. இது நடக்கவில்லையெனில் ஓட்டுக்கள் சிதறி திமுக வெற்றி பெற்றுவிடும் என அவர் கருதுகிறார். சமீபத்தில் டெல்லி சென்ற பழனிச்சாமியிடமும் இதை சொன்னார் அமித்ஷா. ஆனால், சசிகலா, ஓபிஎஸ் தரப்போடு மீண்டும் தன்னால் இணைய முடியது என பழனிச்சாமியிடம் அமித்ஷா சொல்லிவிட்டதாக தெரிகிறது.
ஒருபக்கம் கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் செங்கோட்டையன் தனி லாபி செய்து வருகிறார். மேலும், சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷா, நிர்மலா சீதாராமன் போன்றவர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில், இன்று இரவு செங்கோட்டையன் மீண்டும் டெல்லிக்கு செல்லவிருப்பதாக தகவல் வெளியாகவுள்ளது. அதிமுகவை ஒருங்கிணைக்க பழனிசாமி மறுக்கும் நிலையில் செங்கோட்டையனை முன்னிறுத்தி பாஜக காய் நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.