பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு! மார்ச் மூன்றாம் தேதி இணையதளத்தில் வெளியீடு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவலுக்கு பிறகு தற்போது தான் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளது. அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் மாதம் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளுக்கு அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டது. அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி இரண்டாம் தேதி தான் மீண்டும் வகுப்புகள் தொடங்கப்பட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு இம்மாதம் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று 12 ஆம் வகுப்புக்கான செய்முறை தேர்வானது தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக மார்ச் 1 ஆம் தேதி முதல் மார்ச் 4ஆம் தேதி வரையிலும்,இரண்டாம் கட்டமாக மார்ச் 6 ஆம் தேதி முதல் மார்ச் 9 ஆம் தேதி வரையிலும் நடைபெறும்.
மேலும் நேற்று பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 எழுதும் தனித் தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது. இந்நிலையில் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 வகுப்புக்கான மாணவர்கள் மார்ச் மூன்றாம் தேதி முதல் ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
பொது தேர்வு எழுத உள்ள மாணவர்கள் deg1.tn.gov.in என்ற இணையதள முகவரிக்கு சென்று தங்களுடைய ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இந்த பொது தேர்வினை மொத்தம் 26 லட்சம் மாணவ மாணவிகள் எழுதவுள்ளனர். தேர்வு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் நடந்து வருகின்றது.