ஊரக வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகள் தேவை-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

0
160
Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News
Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

ஊரக வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகள் தேவை-அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

ஊரக வளர்ச்சியை ஊக்குவிக்கும் கொள்கைகள் தேவை என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “இந்தியாவின் பெருநகரங்கள் வியக்க வைக்கும் வகையில் வளர்ச்சியடைந்து வந்தாலும், அவை மக்களை மயக்க வைக்கும் வகையில் இல்லை; வெறுக்க வைக்கும் வகையில்தான் உள்ளன என்பது ஒரு கணக்கெடுப்பின் மூலம் தெரியவந்துள்ளது. நகரங்களில் இருந்து மக்கள் வெளியேறுவது வரவேற்கத்தக்கது தான் என்றாலும் அது விருப்பத்தின் அடிப்படையில் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, புனே, பெங்களூரு, ஹைதராபாத், அகமதாபாத் ஆகிய 8 பெருநகரங்கள், கொச்சின், லக்னோ, கான்பூர், இந்தூர் ஆகிய 4 வளர்ச்சியடைந்து வரும் மாநகரங்கள் ஆகியவை வாழ்வதற்கு வசதியானவையா? என்பது குறித்து ‘எகனாமிக் டைம்ஸ்’ இதழ் இணையதளம் மூலம் கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

அதில் தெரியவந்துள்ள பெரும் அதிர்ச்சியூட்டும் உண்மை என்னவெனில், இந்தியாவின் பெரு நகரங்களில் வாழும் மக்களில் 65 விழுக்காட்டினர் பெருநகரங்களை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளனர். மீதமுள்ள 35 விழுக்காட்டினரில் 22 விழுக்காட்டினர் கருத்து தெரிவிக்காத நிலையில், 13 விழுக்காட்டினர் மட்டும் தான் பெரு நகரங்களில் தொடர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர்.

அவர்களும் பெருநகரங்களில் தொடர்ந்து வாழ விரும்புவதன் காரணம் பெருநகரங்கள் மீதான ஈர்ப்பு அல்ல. மாறாக, தங்களின் சொந்த வீடு பெருநகரங்களில் இருப்பது, அதிக ஊதியத்தில் வேலை கிடைப்பது, நவீன மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் உள்ளன என்பவை தான்.

சென்னை போன்ற பெருநகரங்களை விட்டு வெளியேறுவதற்காக மக்கள் கூறும் இரு முக்கியக் காரணங்கள் வாழ்வதற்கான செலவு மிகவும் அதிகமாக இருப்பதும், வீடுகளின் விலைகள் அல்லது வாடகை மிகவும் அதிகமாக இருப்பதும் தான். இவை தவிர பாதுகாப்பற்ற சூழல், நெரிசல் ஆகியவையும் இதற்குக் காரணமாக உள்ளன.

இந்தியாவில் மட்டுமின்றி, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலேயே மிகவும் பாதுகாப்பான நகரம் சென்னை தான் என்றாலும் கூட, அடுக்குமாடிக் குடியிருப்புகளின் விலை அதிகமுள்ள பெருநகரங்களில் டெல்லி, மும்பைக்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தையும், வாடகை அதிகமுள்ள நகரங்களில் ஐந்தாவது இடத்தையும் சென்னை பிடித்துள்ளது. கூடுதலாக குடிநீர் பற்றாக்குறை, பொதுப்போக்குவரத்து வசதி குறைபாடு ஆகியவை தான் சென்னையிலிருந்து மக்கள் வெளியேற நினைப்பதற்கு முக்கிய காரணங்கள் ஆகும்.

பாமகவைப் பொறுத்தவரை பெருநகரங்களில் இருந்து வெளியேறி இரண்டாம் நிலை நகரங்களை நோக்கியும், கிராமப்புறங்களை நோக்கியும் மக்கள் செல்வது வரவேற்கத்தக்கதாகும். இதுதான் கிராமங்களை நோக்கி இடம்பெயர்தல் என்றழைக்கப்படுகிறது.ஆனால், பெருநகரங்களிலிருந்து மக்கள் வெளியேறுவது அவற்றின் மீதான வெறுப்பால் நிகழக்கூடாது; மாறாக இரண்டு – மூன்றாம் நிலை நகரங்கள், கிராமப்புறங்கள் ஆகியவற்றின் மீதான காதலால் நிகழ வேண்டும்.

இந்தியாவிலேயே அதிக அளவில் நகர்ப்புறமயமாக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு ஆகும். புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்க்கும் போது இது பெருமைப்பட வேண்டிய ஒன்றல்ல.

நகர்ப்புறமயமாக்கலை இரு வகையாக பிரிக்கலாம். முதலாவது கிராமப்புறங்கள் வளர்ச்சியடைந்து நகரங்களாக மாறுவதால் ஏற்படும் நகரமயமாக்கல், இரண்டாவது கிராமப்புறங்களில் வாழ்வாதாரங்கள் இல்லாததால் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பிழைப்புத் தேடி நகரங்களுக்கு செல்வதால் ஏற்படும் நகரமயமாக்கல்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரண்டாவது வகையான நகரமயமாக்கல் தான் அதிகமாக நடைபெறுகிறது. இது வளர்ச்சியின் அடையாளம் அல்ல…. மாறாக, வீக்கத்தின் வெளிப்பாடு ஆகும்.

தமிழ்நாட்டின் தொழில்துறை உற்பத்தியில் சுமார் 75% சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய தலைநகரப் பகுதிகளிலும், கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளிலும்தான் நடைபெறுகிறது. மீதமுள்ள 30% தொழில் உற்பத்தி மட்டும்தான் மாநிலத்தின் மீதமுள்ள மாவட்டங்களில் நடைபெறுகின்றன.

அவ்வாறு இருக்கும் போது விவசாயம் லாபகரமான தொழிலாக இருந்தால் மக்கள் சொந்த ஊர்களை விட்டு வெளியேற மாட்டார்கள்.

ஆனால், காலநிலை மாற்றம் மற்றும் அதைச் சார்ந்த விஷயங்களால் வறட்சியும், வெள்ளமும் கணிக்க முடியாத அளவுக்குச் சென்று விட்ட நிலையில், விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்தகைய சூழலில் கிராமப்பகுதிகளில் வேலையில்லாத அனைவரும் தொழில் உற்பத்தி அதிகம் நடைபெறும் சென்னை, கோவை ஆகிய இடங்களுக்குத்தான் செல்வர். அதுதான் நகரமயமாக்கல் என்று கூறப்படுகிறது. இது நல்லதல்ல.

இன்னும் கேட்டால் சென்னை போன்ற பெருநகரங்கள் வாழத்தகுதியற்றவையாக மாறுவதற்கு காரணமே, சென்னையால் எந்த அளவுக்கு தாக்குப் பிடிக்க முடியுமோ, அதைவிட அதிக எண்ணிக்கையிலானோர் சென்னையில் வேலை தேடி குடியேறுவது தான்.

இச்சிக்கலுக்கு ஒரே தீர்வு வாழத்தகுந்த பகுதிகளாக உள்ள சிறு நகரங்கள், ஊரகங்கள் ஆகியவற்றை வாழ்வாதாரம் மிக்கவையாகவும் மாற்றுவதுதான். சென்னை போன்ற நகரங்களுக்கு யாரும் விரும்பி வருவதில்லை; வேறு வழியின்றி, வேலை தேடித் தான் வருகின்றனர். சென்னையில் கிடைப்பதை விட 40% குறைவான ஊதியம் சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் கிடைத்தால் அங்கு வாழ்வதையே மகிழ்ச்சியாக கருதுவதாக பெரும்பான்மை மக்கள் கூறுகின்றனர்.

எனவே, அதற்கேற்ற வகையில் தொழில் உற்பத்தியை தமிழகம் முழுவதும் பரலாக்குதல், வேளாண்மையை லாபம் தரும் தொழிலாக மாற்றுதல் ஆகியவற்றின் மூலம் நகரப்புறங்களில் உள்ள மக்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஊரகப் பகுதிகளை நோக்கி இடம்பெயரச் செய்ய முடியும். இதுதான் உண்மையான நகரமயமாக்கலாக அமைவதுடன் மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வளர்ச்சியையும் உறுதி செய்யும்.

எனவே, அதற்கேற்ற வகையில் கொள்கைகளை வகுத்து செயல்பட மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்,” என்றும் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

Previous articleதென்னை சர்க்கரை தென்னை தேன் அசத்தும் விவசாயிகள்! அதிக லாபத்தால் மகிழ்ச்சி
Next articleஅரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசின் மீட்புப் பணியை திமுக தலைவர் ஸ்டாலின் குறை கூறி வருகிறார்-தமாகா இளைஞரணித் தலைவர் எம்.யுவராஜா