ராமதாஸ் சமூக வலைத்தள பக்கங்களை முடக்கிய அன்புமணி ராமதாஸ்! கொந்தளிக்கும் தொண்டர்கள் 

கடந்த சில மாதங்களாக பாமகவில் உட்கட்சி பிரச்சனை பூதாகரமாக போய்க் கொண்டிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே அப்பா மகனுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது என்று கூறிய நிலையில் இளைஞர் அணி தலைவராக தனது மகள் வழி பேரனான முகுந்தனை மருத்துவர் ராமதாஸ் அறிவித்த போது மேடையிலேயே அதற்கு அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் மூலமாக அப்பா மகனுக்கிடையேயான அதிகார போட்டி வெளி உலகத்துக்கு தெரிய வந்தது. அந்த மேடையிலேயே இனிமேல் தானே தலைவராக செயல்படுவதாகவும், அன்புமணி ராமதாஸ் செயல்தலைவராக செயல்படுவார் எனவும் அறிவித்தார். அதற்கு அன்புமணி ராமதாஸ் தான் பனையூரில் தனி அலுவலகம் திறந்துள்ளதாகவும், தன்னை சந்திப்பவர்கள் அங்கு சந்திக்கலாம் என்றும் அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து சென்னைக்கு அருகே பனையூரில் தனி அலுவலகம் திறந்து தனக்கான ஆதரவாளர்களுடன் அன்புமணி ராமதாஸ் செயல்பட்டு வருகிறார். அதன் ஒரு கட்டமாக தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாஸ் நடத்திய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பெரும்பாலோனோர் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு செய்தனர். இந்த புறக்கணிப்புக்கு காரணமாக அன்புமணி ராமதாஸ் உள்ளதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் இரு தரப்பிலும் தங்களுக்கான ஆதரவாளர்களை திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதற்காக ஒரு சிலரை நீக்கியும் வேறு சில தங்களுக்கு ஆதரவானவர்களை அந்த பொறுப்பில் நியமித்தும் கட்சியின் நிறுவனரும் தலைவருமான மருத்துவர் ராமதாஸ் அறிவித்து வருகிறார்.

அந்த வகையில் கட்சியின் பொருளாளர் திலகபாமா, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் உள்ளிட்டோரை நீக்கி அவர்களுக்கு பதிலாக பொருளாளராக சையத் மன்சூர் உசேன் மற்றும் பொதுச்செயலாளராக முரளி சங்கர் உள்ளிட்டோரை நியமித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஒரு மாத காலமாக மருத்துவர் ராமதாஸ் அவர்களின் சமூக வலைத்தள பக்கங்களை செயல்படாமல் முடக்கி அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் முடக்கி வைத்துள்ளனர். தமிழக அரசியலில் மக்கள் பிரச்சனைகளுக்காக முதல் நபராக குரல் கொடுப்பதும், அது சார்ந்த அறிக்கைகளை உடனுக்குடன் வெளியிடுவதும் மருத்துவர் ராமதாஸ் மட்டுமே.

இந்நிலையில் அவரின் அறிக்கைகள் மற்றும் செயல்பாடுகளை மக்கள் தெரிந்து கொள்வதை தடுக்கும் வகையில் அன்புமணி ராமதாஸ் ஆதரவாளர்கள் அவரது சமூக வலைத்தள கணக்குளை முடக்கி செயல்படவிடாமல் செய்துள்ளனர். இதனை கண்டித்து பாமக தொண்டர்கள் தங்களது ஆதங்கத்தை சமூக வலைத்தளங்களில் எழுதி வருகின்றனர்.