எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை பார்த்தாச்சு! அன்புமணி ராமதாஸ் தொண்டர்களுக்கு இட்ட கட்டளை

Photo of author

By Parthipan K

எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி பழனிசாமி வரை பார்த்தாச்சு! அன்புமணி ராமதாஸ் தொண்டர்களுக்கு இட்ட கட்டளை

பாமக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் இணைய வழியில் கலந்துரையாடிய அன்புமணி ராமதாஸ் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்துக்கு ஆதரவு தராத அரசியல் கட்சிகளின் பின் ஏன் செல்கிறீர்கள்? என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

டிசம்பர் 23 ஆம் தேதி அனைத்து கிராமங்களில் உள்ள 523 பேரூராட்சிகளில் மனு கொடுத்து வன்னியர் இட ஒதுக்கீடுக்காக போராட்டம் நடைபெறவுள்ளதால் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் இணையவழி கலந்தாய்வு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார்.

அதில் கட்சி உறுப்பினர்களும் மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டார்கள் அதில் அவர் பேசியதாவது, தொடர்ந்து வன்னிய சமுதாயம் வேலைவாய்ப்பிலும், பொருளாதாரத்திலும் பின்தங்கியே உள்ளது. இந்த நிலை மாற வேண்டும் என்று கடந்த 40 வருட காலமாக போராடி வருகிறார் நமது அய்யா. ஆனால் அதற்கான முழு பலன் இன்னும் நமக்கு கிடைக்கவில்லை.

எம்.ஜி.ஆர் முதல் இன்று உள்ள எடப்பாடி பழனிச்சாமி வரை அனைவரிடமும் இட ஒதுக்கீடு கோரிக்கை வைத்தோம். ஆனால் இன்றளவும் நமக்கு தேவையான 20 சதவீத இட ஒதுக்கீடு இன்னும் கிடைத்தபாடில்லை.

நாம் மற்ற அனைத்து சமுதாயத்துக்கும் போராடியிருக்கிறோம் ஆனால் நமக்காக குரல் கொடுக்க இங்கு யாரும் இல்லை.தமிழகத்தில் உள்ள மாநில அரசியல் கட்சிகள் முதல் மத்தியில் உள்ள தேசிய கட்சிகள் வரை யாராவது வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்திற்க்கு ஆதரவு தந்தார்களா? இல்லையே பின்பு ஏன் நீங்கள் அவர்கள் பின் செல்லுகிறீர்கள்.

மேலும் ஸ்டாலினை பற்றி அவர் குறிப்பிட்டுள்ளதாவது :ஸ்டாலின் அவர்களுக்கு செலக்டிவ் அம்னீஷியா – தேர்தல் வந்தால் மட்டுமே வன்னியர்கள் அவர் நினைவிற்கு வருவார்கள்.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்கு பிறகு, வன்னியர் தனி இட ஒதுக்கீடு பற்றி ஏதாவது ஒரு இடத்தில் பேசி இருப்பாரா? அவர் என்று ஆவேசமாக பேசினார்.

மேலும் அவர் கூறுகையில், அன்று SC/ST மாணவர்களுக்கு தேசியளவில் மருத்துவ உயர்கல்வியில் இட ஒதுக்கீட்டை மத்திய சுகாதார துறை அமைச்சராக இருந்தபோது முதன்முதலாக நான் ஏற்படுத்தி தந்தேன். எனக்கு முன்பு எத்தனையோ அமைச்சர்கள் இருந்தார்கள் அவர்களால் செய்ய முடியாததை நான் செய்தேன்.

இதற்காக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆனைய தலைவர் பூட்டாசிங் பாராட்டி விழா எடுத்து, ‘வாழும் அம்பேத்கர்’ என்று என்னை வாழ்த்தினார்,அதே மேடையில் திருமாவளவன் அவர்களும் இருந்தார். இன்று அதே அன்புமணி வன்னியர்களுக்கு சமூக நீதி கேட்டு போராடினால் என்னை ‘சாதியவாதி’ என்கிறார்கள்.. இவர்களுக்கு ஏன் இவ்வளவு வன்மம் என்பதே புரியவில்லை என்று உருக்கமாக பேசினார்.

அதேபோல் எடப்பாடி பழனிசாமி ஆணையம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.இவையெல்லாம் காலம் கடத்தும், ஏமாற்றும் தந்திரங்கள் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களுக்கு இத்தகைய ஆணையத்தை அமைப்பதில் துளியும் நம்பிக்கை இல்லை; இது தேவையும் இல்லை. எங்களுக்குத் தேவை வன்னிய சமுதாயத்திற்கு 20% தனி இட ஒதுக்கீடு தான். அதை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.

அதுவரை அறவழியில் போராட்டம் நாம் செய்ய வேண்டும். இது அனைவருக்குமான போராட்டம் . மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் அனைத்து சாதியினருக்கும் அவர் அவர் மக்கள் தொகைக்கு ஏற்ப இடப்பக்கீடு தர வேண்டும் என்பதே நாங்கள் முன்னிலை படுத்தும் முதன்மை கோரிக்கை.இந்த கோரிக்கை நிறைவேற்ற பட்டால் அனைத்து மக்களும் பயன் அடைவார்கள் என்று அன்புமணி ராமதாஸ் பேசியிருந்தார்.