இரண்டு நாட்களாக அனைவரும் விவாதிக்கும் பொருள் வங்கி தேர்வில் உயர் சாதியினருக்கு இட ஒதுக்கீடு செய்தது தான். இந்தியா அதிக இளைஞர்களை கொண்ட நாடு. வேலைவாய்ப்பு என்பது எட்டா கனி ஆகும். அவர்களின் திறமைக்கு ஏற்ப வேலையும் உழைப்புக்கு ஏற்ற ஊதியமும் கிடைப்பதில்லை. இதனால் இந்த சூழலில் வங்கி தேர்வில் உயர் சாதியினருக்கு மட்டும் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்தது ஏற்றது அல்ல இதனால் திறமை கொண்ட மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, உயர்வகுப்பு இடஒதுக்கீடு சமூக அநீதி என்பதற்கு வங்கி தேர்வு முடிவே சாட்சி. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர் நிலையிலான பணிகளுக்கு நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வுகளில் வெற்றி பெற்று முதன்மைத் தேர்வுகளுக்கு தகுதி பெறுவதற்கான தகுதி கான மதிப்பெண் தாழ்த்தப்பட்ட வகுப்பினரை விட, உயர்வகுப்பு ஏழைகளுக்கு குறைவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. சமூக நீதிக்கு எதிரான இச்செயல் கடுமையான கண்டிக்கத்தக்கது திரும்பப்பெறப்பட வேண்டியதாகும்.
நாடு முழுவதும் மொத்தம் 8500-க்கும் கூடுதலான எஸ்பிஐ பணியாளர்களை தேர்வு செய்வதற்காக முதல்நிலை எழுத்துத் தேர்வு கடந்த மாதம் 22 மற்றும் 23-ஆம் தேதிகளில் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அடுத்த மாதம் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள முதன்மைத் தேர்வில் பங்கேற்க தகுதி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மண்டலத்தில் பொதுப்பிரிவினர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியவற்றுக்கு நூற்றுக்கு 61.25 தகுதி காண் மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினருக்கான தகுதிகாண் மதிப்பெண் 53.75 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், உயர்வகுப்பு ஏழைகளுக்கான தகுதி காண் மதிப்பெண் மட்டும் 28.50 என்ற அளவில் உள்ளது.
பள்ளிகளில் தேர்ச்சி பெறுவதற்காக தகுதி கான மதிப்பெண்ணாக 35% நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்புகளில் 40 விழுக்காடும், பட்டமேற்படிப்புக்கு 50 விழுக்காடும் தகுதி கான மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், வங்கிகளில் எழுத்தர் பணிக்கான முதல் நிலைத் தேர்வில் 28.5% மதிப்பெண் பெற்றவர்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்தால், அவர்களுடைய தகுதி எத்தகையதாக இருக்கும்? அவர்களால் வங்கிப் பணிகளை எவ்வாறு திறம்பட மேற்கொள்ள முடியும்?
இதனால் உயர்வகுப்பு ஏழைகளுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்ட காரணங்களில் மிகவும் முக்கியமானது, அவர்களுக்கு திறமையிருந்தும் பிற வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் போதிய அளவுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்பது ஆகும்.
ஆனால், இப்போது தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் ஆகியோரைவிட மிகக்குறைந்த மதிப்பெண்களை பெற்றுள்ள போதிலும், அவர்கள் முதன்மைத் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். சுருக்கமாக கூற வேண்டுமானால், பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிக்கப்பட்டு உயர்வகுப்பு ஏழைகளுக்கு தரப்பட்டுள்ளது. இதை விட மோசமான, கொடூரமான, இயற்கைக்கு மாறான சமூக அநீதி வேறு என்ன இருக்க முடியும்?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை உயர்சாதி ஏழைகளின் மக்கள் தொகை அளவை விட இட ஒதுக்கீட்டு அளவு அதிகமாக உள்ளது. அதனால், அந்தப் பிரிவில் தேர்வு எழுதுபவர்கள் அனைவரும் கூட தேர்ச்சி பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. இத்தகைய அநீதியை ஏற்றுக் கொள்ள முடியாது. உயர்சாதியினருக்கு இட ஒதுக்கீடு கூடாது என்பதற்கு இது மட்டுமே காரணம் அல்ல…. ஏராளமான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.
ஆனால், அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தகுதியுடைய இட ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களின் வாய்ப்புகளை பறிக்கும் என்பதற்கு இது தான் எடுத்துக்காட்டு ஆகும். எனவே, எந்த புள்ளி விவரமும் இல்லாமல் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் உயர்வகுப்பு ஏழைகளுக்கு வழங்கப்பட்டுள்ள 10 விழுக்காடு இட ஒதுக்கீட்டை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.” என அதில் தெவிக்கப்பட்டுள்ளது.
பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கைக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசின் இந்த உயர்சாதியினர் இட ஒதுக்கீடு செய்தது பற்றி மறு பரிசீலனை செய்யவேண்டும் என்பதே இதனால் பாதிக்க படுபவர்களின் கருத்து ஆகும்.
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.