ஆந்திர நாவல் பழத்திற்கு கம்பம் பகுதிகளில் பெருகும் மவுசு! விற்பனை படுஜோர்!
கம்பம் சுற்றுவட்டார பகுதிகளில் மருத்துவ குணம் நிறைந்த ஆந்திர நாவல் பழம் கிலோ 200 ரூபாய் வரை விற்பனையானாலும் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டத்தில் கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாவல் பழம் விற்பனை தற்போது அமோகமாக நடைபெற்று வருகிறது. ஆந்திரா மாநிலம் மதனப்பள்ளியில் விளையக்கூடிய குண்டு ரக நாவல் பழம் தமிழகத்தின் தென் மாவட்டங்ளுக்கு அனுப்பப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் துவர்ப்பு சுவை இல்லாமல் கூடுதல் இனிப்புச்சுவையுடன் அதிக பருமன் கொண்ட ஆந்திர நாவல் பழத்திற்கு பொதுமக்களிடம் வரவேற்பு உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் விளையக்கூடிய நாவல் பழம் உடலுக்கு குளிர்ச்சியை ஏற்படுத்துவதாலும், அதிகமான மருத்துவ குணம் கொண்டதாலும் இந்த பழத்திற்கு எப்போதும் வரவேற்பு உண்டு. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் ஆகிய பாதிப்புள்ளவர்கள் இதன் கொட்டைகளை உலரவைத்து பொடி செய்து மருந்து பொருளாக பயன்படுவதாக கூறுகின்றனர்.அதிக இனிப்பு சுவை கொண்ட நாவல் பழம் கிலோ 200 ரூபாய் வரை கம்பம் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்டாலும் நாவல் பழங்களை வாங்குவதற்கு பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருவதால் நாவல் பழங்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது.