பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்!
மகப்பேறு விடுப்பு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் இரண்டாவது நாளாக தமிழகம் முழுவதும் போராட்டம்.
அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் உறுதி. போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அங்கன்வாடி ஊழியர்கள் அறிவிப்பு.
அரசு ஊழியர்களைப் போல ஓராண்டு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும்.தமிழகத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் பரவி வரும் சூழலில் 2 வயது முதல் 5 வயது வரையான குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டும், கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க அங்கன்வாடி மையங்களுக்கும் ஒருமாத கால விடுமுறை வழங்க வேண்டும்.
பத்தாண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு நிபந்தனையின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். பத்து குழந்தைகளுக்கு குறைவான மையங்களை பிரதான மையங்களோடு இணைப்பதை கைவிட வேண்டும். மகப்பேறு விடுப்பு ஒரு ஆண்டு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் கடந்த இரண்டு தினங்களாக தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அங்கன்வாடி ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பரிசிலீப்பதாக அமைச்சர் கீதா ஜீவன் நிர்வாகிகளிடம் உறுதியளித்த நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.