அண்ணாமலை இவ்வாறு செய்தால் ராகுல் காந்தி போல் ஆகிவிட முடியாது- ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு!
77 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது.இந்நிலையில் டெல்லி செங்கோட்டையில் காலை பிரதமர் மோடி தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.இதனை தொடர்ந்து அந்தந்த மாநில முதல்வர்கள் அவர்களின் மாநிலங்களில் தேசிய கொடியை ஏற்றினர்.அதன் பின்னர் பள்ளிகள்,பொது இடங்கள்,அரசியல் கட்சி அலுவலங்களில் கொடி ஏற்றப்பட்டது.இதன்படி,சென்னையில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் அமைந்துள்ள சத்தியமூர்த்தி பவனில் சுதந்திர தின விழா சிறப்பாக துவங்கப்பட்டு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தேசிய கொடியை ஏற்றினார்.மேலும் இந்நிகழ்ச்சியில் முன்னாள் காங்கிரஸ் தலைவரும்,சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்,கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
கொடியேற்றத்திற்கு பின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ பேசியது
தமிழக பாஜக தலைவர் திரு.அண்ணாமலை அவர்கள் மேற்கொண்டு இருப்பது பாத யாத்திரை அல்ல அது பஸ் யாத்திரை என்று சாடினார்.மேலும் இவ்வாறு செய்வதன் மூலம் அவர் ராகுல் காந்தி ஆகிவிட முடியாது.ராகுல் காந்தி நடை பயணம் மேற்கொண்டு மக்களின் மனதில் இடம் பிடித்ததை போல் அண்ணாமலையால் செய்ய முடியாது.மேலும் ஊர்க்குருவி உயரே உயரே பறந்தாலும் பருந்தாகிவிட முடியாது என்ற பழமொழியை இதற்கு உதாரண படுத்தினார்.
மேலும் ராகுல் காந்தியை பின்பற்றி அண்ணாமலை மேற்கொண்டுள்ள நடைபயண கனவு
புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்ட கதை போல் இருக்கின்றது என்றார்.
மேலும் அண்ணாமலை தமிழகம் முழுவதும் மேற்கொண்டுள்ள நடை பயணம் முடியும் தருணத்தில் அவர் தமிழக பாஜக தலைவர் பதவியில் இருக்க மாட்டார் என்று தெரிவித்தார்.மேலும் கர்நாடக மாநிலத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியாற்றிய பொழுது அண்ணாமலை அவர்கள் செய்த ஊழலுக்காக கைதாவது உறுதி என்றார்.இந்நிலையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.