அண்ணாமலை ஒரு கோமாளி! செந்தில் பாலாஜி தாக்கு

0
170
#image_title
அண்ணாமலை ஒரு கோமாளி! செந்தில் பாலாஜி தாக்கு.
திமுக – பாஜக இடையே கடும் மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை கையில் கட்டியுள்ள ரபேல் வாட்ச் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருந்தார்.
ரபேல் வாட்ச் பில்லை வெளியிட வேண்டும் என கூறியிருந்தார். இதனையடுத்து ஏப்ரல் 14 ஆம் தேதி ரபேல் வாட்ச்க்கான பில்லை வெளியிட்டார். மேலும் ரபேல் வாட்ச் எனது நண்பர் சேரலாதனிடம் இருந்து தான் வாங்கியதாகவும் குறிப்பிட்டார். இதனை தொடர்ந்து திமுக நிர்வாகிகள் 17 பேரின் சொத்து பட்டியலையும் வெளியிட்டார்.
இந்த நிலையில் இது தொடர்பாக கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. உண்மையாவே மக்களுக்கு சேவை செய்ய நினைப்பவர்கள், பணியாற்றுபவர்கள் அரசுக்கு தங்களுடைய கருத்துக்களை முன் வைக்கலாம் அது ஆக்கபூர்வமான செயல்.
நீங்கள் சொல்லும் நபர் ஒரு கோமாளி, அவர் செய்தியாளர்களை சந்திக்கும் பொழுது கேள்வி கேட்கக்கூடாது என்று கூறுகிறார். நீங்கள் அந்த இடத்தில் சொல்லி இருக்க வேண்டும் எங்களுக்கும் நேரம் இல்லை என்று.
நீங்கள் வீடியோவாக பதிவு செய்து எங்கள் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கலாமே என்று கேட்டிருக்கலாம். நான் கேட்டது ரபேல் வாட்ச்க்கு பில் ஆனால் அவர் கொடுத்தது துண்டு சீட்டு என விமர்சித்தார். மளிகை கடைக்கு சென்றால் பழைய பேப்பரை எடுத்து பின்பக்கத்தில் எழுதித் தருவார்கள். எனவே அண்ணாமலை கொடுத்தது பில்லா நீங்களே கூறுங்கள் என கேள்வி எழுப்பினார்.
ஒரு செல்போன் வாங்கினோம் என்றால், எந்த கடையில் வாங்கினோம், எப்போது வாங்கினோம் என்பதை மறந்த போய்விடுமா.வாட்ச், செல்போன் நினைவில் இருக்கக்கூடிய பொருள் அப்படியே யாரேனும் பரிசாக கொடுத்தாலும் அது நமது நினைவில் இருக்கும்.
கேள்வி கேட்கும் பொழுது இதற்கு பதில் அளிக்கும் வகையில், இது எனக்கு நண்பர் சேரலாதன் மூலம் வந்தது என்று கூறியிருந்தால் முடிந்து இருக்கும். பில் எல்லாம் தயார் பண்ணுவதற்கு நாலு, ஐந்து மாதங்கள் அவகாசம் எடுத்து கொள்ளப்பட்டுள்ளது. ரபேல் வாட்ச் யார் வாங்கியுள்ளார்கள் என்பதை கண்டறிந்து அவரை நண்பராக்கி அவர் தனக்கு கொடுத்தாக சொல்லப்பட்டுள்ளது.
வாட்சுக்கு பணம் கொடுத்த தேதியில் அண்ணாமலை அக்கவுண்டில் இருந்து பணம் எடுத்திருக்க வேண்டும், ஆனால் எதுவும் இல்லை. இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல் பணம் கொடுக்கக் கூடாது என்று சட்டம் உள்ளது. 3 லட்ச ரூபாய்க்கு வாங்கிய வாட்ச் இரண்டு லட்ச ரூபாய்க்கு எப்படி கொடுப்பார்கள்.
ஒரு பொய்யை மறைப்பதற்காக ஆயிரம் பொய்யை கூறுகிறார்கள். நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறார்கள். ஒருபோதும் அவர்களின் எண்ணம் பலிக்காது. தமிழகத்தில் நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் பட்டியலை வெளியிடுவேன் என்று சொல்லி சொத்து பட்டியலை வெளியிட்டதற்கு வித்தியாசம் உள்ளது.
குறைந்தபட்ச அறிவு இல்லாமல் அண்ணாமலை சொத்து பட்டியலை வெளியீடு செய்துள்ளார். என்னுடைய தேர்தல் வேட்பு மனுவிலே சொத்துக்கள் கணக்கில் காட்டப்பட்டுள்ளது. சொத்துக்கும், ஊழலுக்கும் வித்தியாசம் உள்ளது , அதை தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துக் கொள்ள சொல்லுங்கள் என செந்தில் பாலாஜி கூறினார்.