விதியை மீறி பிரச்சாரம் செய்த அண்ணாமலை.. கேள்வி கேட்ட திமுக கூட்டணி கட்சிகள் மீது சரமாரி தாக்குதல்..!!
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ளன. எனவே அனைத்து கட்சி வேட்பாளர்களும் இரவு பகல் பாராது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். இருப்பினும் தேர்தல் பிரச்சாரத்திற்கென ஒரு விதிமுறை உள்ளது. அதன்படி இரவில் குறிப்பிட்ட நேரம் வரை மட்டுமே பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும். ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விதியை மீறியதாக கூறப்படுகிறது.
அதன்படி, கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் பகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை நேற்று இரவு 10 மணியை தாண்டி பிரச்சாரம் செய்ததாக கூறப்படுகிறது. எனவே விதிமுறையை மீறி இரவு 10.40 மணி வரை எப்படி பிரச்சாரத்திற்கு அனுமதிக்கலாம் என அங்கிருந்த காவலர்களிடம் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த சில நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட ஒருகட்டத்திற்கு மேல் இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் பாஜகவினர் சரமாரியாக தாக்கியதில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுகவை சேர்ந்த 7 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து அங்கிருந்த காவலர்கள் இருதரப்பினரையும் கலைந்துபோக செய்தனர்.
பின்னர் ஆம்புலன்ஸை வரவழைத்து காயமடைந்த நபர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் கோவையில் சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.