பள்ளி ஆண்டு விழாவுக்கு குற்றவாளியை அழைத்த ஆசிரியர்கள்: வெளியான அதிர்ச்சி தகவல்!

0
6

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகே துத்திப்பட்டு ஊராட்சிக்குட்பட்ட கன்றாம்பள்ளியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மார்ச் 22 அன்று ஆண்டு விழா நடைபெற்றது. விழாவின் ஒரு பகுதியாக, மாணவர்களுக்கு நடன போட்டி, பாடல் போட்டி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

விழாவில் துத்திப்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர் சுவிதா கணேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். அவருடன், அவரது கணவர் கணேஷ் மேடையில் இருந்தார். இவர் நிகழ்ச்சியில் பாடல் பாடி மாணவர்களுடன் உற்சாகமாக கலந்து கொண்டார்.

இந்த நிலையில், கணேஷ் மீது தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் இதற்கு முன்பு பலமுறை கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால், சரித்திர குற்றவாளியான அவரின் அரசு பள்ளி விழாவில் பங்கேற்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், ஒரு குற்றவாளி பள்ளி விழாவில் எப்படி பங்கேற்றார்? அவருக்கு யார் அனுமதி வழங்கினார்? என்ற கேள்விகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் சந்திரசேகரிடம் கேட்டபோது, “சுவிதா ஊராட்சி மன்றத் தலைவர் என்பதால், அவரை விழாவிற்கு அழைத்தோம். ஆனால், அவரது கணவர் கணேஷ் மேடையில் பேசவும் பாடல் பாடவும் அனுமதி பெறவில்லை. இது அவருடைய தனிப்பட்ட செயலாகும்,” என்று தெரிவித்தார்.

சமூக வலைதளங்களில் காணொளி பரவி சர்ச்சையை உருவாக்கியுள்ள நிலையில், அரசு பள்ளியில் குற்றவாளிகள் கலந்து கொள்ளுவதை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Previous articleதிமுக ஆட்சியை சிக்கலில் தள்ளிய சம்பவங்கள்: சட்டசபை நடக்கும் போதே தமிழகம் முழுக்க பகீர்!
Next articleடிராகன் டீமுக்கு செம ஹேப்பியை கொடுத்த தளபதி.. சொன்னா புரியாது பாஸ்!.. ஃபீல் பண்ணும் இயக்குனர்!…