ஒடிசாவில் மீண்டும் ஒரு பயங்கர விபத்து!! சோகத்தில் மூழ்கிய ஒடிசா மாநிலம்!!
ஒடிசா மாநிலத்தில் சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட ரயில் விபத்தின் சுவடு கூட இன்னும் மறையாத நிலையில் மீண்டும் ஒரு பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் இன்று(ஜூன் 26) ஏற்பட்ட பேருந்து விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் ஒடிசா மாநில மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள திகபாஹநாடி என்னும் இடத்தில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. குடாரி பகுதியில் இருந்து புவனேஷ்வர் மாவட்டம் ராயகடா பகுதியை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதே நேரத்தில் பேராம்பூரில் இருந்து திருமண வீட்டாரை ஏற்றிக் கொண்டு வந்த தனியார் பேருந்து அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் திருமண வீட்டாருடன் வந்த தனியார் பேருந்து தலைகீழாக கவிழ்த்தது. இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி 8 பெர் உயிரிழந்தனர். இதுவரை மொத்தம் 11 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
பேருந்து விபத்தில் பலத்த காயம் அடைந்த மற்ற பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இதில் காயம் அடைந்த சிலபேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 3 லட்சம் ரூபாயும் விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு 30000 ரூபாயும் நிவாரண தொகையாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஒடிசா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர் நடந்த ஒடிசா மாநில ரயில் விபத்தில் 270க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒடிசா மாநில மக்களிடியே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் இன்று நடந்த இந்த பேருந்து விபத்து மேலும் சோகத்தை அதிகரித்துள்ளது.