சென்ற அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகம் முழுவதும் இருந்து 3 லட்சத்து 72 ஆயிரத்து 512 தெரு விளக்குகள் எல்இடி விளக்குகளாக மாற்றும் திட்டம் செயல்படுத்துவதில் முறைகேடு நடந்ததாக அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு எதிராக தற்போதைய சபாநாயகர் அப்பாவு புகார் கொடுத்திருந்தார்.
இந்தப் புகார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளாமல் புகார்களை பொதுத்துறை செயலாளர் ஒப்புதலுக்காக லஞ்ச ஒழிப்புத்துறை அனுப்பி இருப்பதாக குற்றம்சாட்டி ஆளுநரின் ஒப்புதல் பெற்று வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார், ராமமூர்த்தி உள்ளிட்டோர் அமர்வு முன்பு கடந்த பெப்ரவரி மாதம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட சமயத்தில் அரசு தரப்பில் முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான தொடர்பாக லோக் ஆயுக்தா விசாரணைக்கு அனுப்பி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இந்த வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.
இந்த சூழ்நிலையில், இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வு இன்றைய தினம் விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட சமயத்தில் சபாநாயகர் அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். இதனையடுத்து ,இதைபதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவை வாபஸ் பெறுவதற்கு அனுமதி வழங்கினர். அமைச்சர் வேலுமணி மீதான வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு இருக்கிறார்கள்.