தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்று பெருமையினை தனக்கே உரியதாக மாற்றிக் கொண்டுள்ளார் அர்ச்சனா பட்நாயக்.
2018 ஆம் ஆண்டு முதல் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்ய பிரதா சாகு கால்நடை பராமரிப்புத் துறை முதன்மைச் செயலாளராக கடந்த சில நாட்களுக்கு முன்பு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து தற்பொழுது முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான தகவலை அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டும் உள்ளது.
தற்பொழுது தமிழகத்தின் முதல் பெண் தேர்தல் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட அர்ச்சனா பட்நாயக் அவர்கள், இதற்கு முன் ஆசிரியர் தேர்வாணையக் குழுவின் தலைவராக இருந்து, தமிழக அரசின் சிறு, குறு தொழிலாளர் துறையின் செயலாளராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இவர் 2002 ஆம் ஆண்டு ஐஏஎஸ் அதிகாரியாக தமிழ்நாடு கேடரில் பணிக்கு சேர்ந்துள்ளார். இதனை தொடர்ந்து நீலகிரி மற்றும் கோயம்புத்தூரில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார்.
கடந்த ஆண்டு ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு உதவ தமிழ்நாடு அரசால் அனுப்பப்பட்ட குழுவில் அர்ச்சனா பட்நாயக் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர் தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்ற பெருமையுடன் கோயம்புத்தூரில் முதல் பெண் ஆட்சியர் என்ற பெருமையையும் தன்னகத்தே கொண்டுள்ளார்.