கட்டுமான பணிக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள, ‘எம் சாண்ட்’ விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால், புதிதாக வீடு கட்டுவோர் அதிர்ச்சியில் உள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் தற்போதைய நிலவரப்படி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கருங்கல் குவாரிகள் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும், அரசு அனுமதியுடன் 430 எம் சாண்ட் தயாரிப்பு ஆலைகளும் இயங்கி வருகின்றன. கட்டுமானப் பணிகளின் மொத்த தேவையில் 60% அளவுக்கு இங்குள்ள ஆலைகளால் தான், பூர்த்தி செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இதற்கிடையே, கடந்த ஜனவரி மாதத்தில் எம்.சாண்டின் விலையை நாமக்கல், கரூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட குவாரி உரிமையாளர் சங்கங்கள் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டன.
இந்த விலையை உயர்வுக்கு கட்டுமானத் துறையினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், தமிழ்நாடு அரசு இதுகுறித்து கண்டுகொள்ளாமல் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் எம் சாண்டின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு டன் எம் சாண்ட் ரூ.650இல் இருந்து ரூ.1,250ஆகவும், பி சாண்ட் ரூ.750இல் இருந்து ரூ.1,500ஆகவும் உயர்ந்துள்ளது.
இதனால், ஒரு லாரி எம். சாண்ட் (6 யூனிட்) ரூ.55,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு காரணமாக வீடு கட்டும் செலவு ஒரு சதுர அடிக்கு ரூ.100 அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, விலையை அரசு முறைப்படுத்த வேண்டும் என்றும், தினமும் அதிக மணிநேரம் குவாரிகள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விலை உயர்வு காரணமாக சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வரும் திட்டங்களில் சுமார் 30 சதவீத பணிகள் முடங்கியுள்ளன.