சுபமுகூர்த்த தினங்களை ஒட்டி சார்பதிவாளர் அலுவலகங்களில் நவம்பர் 7 மற்றும் 8 தேதிகளில் அதாவது இன்று மற்றும் நாளை கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :-
சுபமுகூர்த்த தினங்களாக மக்களால் பார்க்கப்படும் தினங்களில் அதிகப்படியான ஆவண பதிவுகள் சார்பதிவாளர் அலுவலகங்களில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் மக்களின் கோரிக்கையை ஏற்று ஐப்பசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினங்களான நவம்பர் 7ஆம் தேதி மற்றும் 8 தேதிகளில் கூடுதலான டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் இது முறையே, ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களோடு, ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உங்களது வீடுகளில் நீங்கள் பத்திர பதிவு மேற்கொள்ளப் போகிறீர்கள் என்றால் உடனடியாக சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று டோக்கன் முன் பதிவு செய்து கொள்ளுங்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.