பங்குனி உத்திரம் என்பது முருகப் பெருமானுக்கு மட்டும் அன்றி அனைத்து தெய்வங்களுக்கும் உகந்த நாளாகும்.பங்குனி உத்திரம் என்றதும் முதலில் நினைவுக்கு வருவது முருகனுக்குரிய விரத நாள் என்பதுதான். தமிழ் மாதங்களில் 12 வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12 வது நட்சத்திரமான உத்திரம் இவை இரண்டும் சேரும் நாள்தான் பங்குனி உத்திரம்.
அனைத்து மாதங்களிலும் உத்திரம் நட்சத்திரம் வருவதுண்டு. ஆனால் இந்த பங்குனி மாதத்தில் வருகின்ற உத்திரம் நட்சத்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு. இந்த நன்னாளில் பக்தர்கள் முருகனுக்கு தேர் இழுத்தும், அபிஷேகம் செய்தும் அவர்களது வேண்டுதலின் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.
இந்த வருட பங்குனி உத்திரம் ஆனது ஏப்ரல் 10 ஆம் தேதி தொடங்கி 11 ஆம் தேதி வரையிலும் இருக்கிறது. பங்குனி மாதத்தில் உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வருகின்ற நாளில்தான் நாம் வழிபாடு செய்வோம். அப்பொழுது பௌர்ணமி திதியும் அமைந்திருப்பது மிகவும் விசேஷம்.
வெள்ளிக்கிழமையில் தான் பங்குனி உத்திரத்தை நாம் வழிபாடு செய்வோம். எனவே இந்த நாளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
உத்திரம் நட்சத்திரம் சரியாக எந்த நேரத்தில் நடக்கிறதோ அந்த நேரத்தில்தான் நாம் முருகனை வழிபாடு செய்வோம். அதாவது இந்த உத்திரம் நட்சத்திரம் ஆனது ஏப்ரல் 10 ஆம் தேதி பிற்பகல் 12:24 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் ஏப்ரல் 11 ஆம் தேதி பிற்பகல் 3:10 மணி வரையிலும் இருக்கிறது.
எனவே வெள்ளிக்கிழமை அதாவது 11 ஆம் தேதி பிற்பகல் 3:10 மணி வரையிலும், நமது வேண்டுதல்களை கூறி வழிபாட்டை செய்து கொள்ளலாம். இந்த நாளில் கடன் பிரச்சனை, வியாபாரம், தொழில், குடும்ப முன்னேற்றம், மன அமைதி, குழந்தையின்மை, திருமணம் படிப்பு, வேலை, பணவரவு, குடும்ப ஒற்றுமை இது போன்ற எந்த வேண்டுதல்களாக இருந்தாலும் இந்த வழிபாட்டை செய்வதன் மூலம் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
இந்த நாளில் விரதம் இருப்பவர்கள் காலை முதல் மதியம் வரையிலும் இருக்கலாம். அனைத்து தெய்வங்களுக்கும் இந்த பங்குனி உத்திரம் நாள் அன்று தான் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. எனவே ஆலயங்களில் சாமிக்கு திருக்கல்யாணம் செய்து வைப்பார்கள். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது மிகவும் சிறப்பு.
இந்த நாளில் முருகனை வேண்டி கோவிலில் ஆறு தீபங்களை ஏற்றலாம். வீட்டில் முருகன் படத்தை வைத்து வழிபடும் பொழுது, முருகனுக்கு மிகவும் பிடித்த செவ்வரளி பூவை சூட்டி, வெற்றிலை தீபம் போட்டு வழிபடலாம். வெற்றிலை என்பது வெற்றியை தரக்கூடிய ஒன்று. எனவே முருகனுக்கு வெற்றிலை தீபம் ஏற்றுவது அவ்வளவு சிறப்பானதாக இருக்கும்.
முருகனின் படம் இருந்தால் அந்தப் படத்தை சுற்றிலும் ஆறு வெற்றிலைகளை வைத்து, அதன் மேல் ஆறு அகல் விளக்கினை வைத்து தீபம் ஏற்றலாம். முருகன் படம் இல்லாதவர்கள் நடுவில் ஒரு விளக்கினை ஏற்றி வைத்து, அதனை சுற்றிலும் ஆறு வெற்றிலைகளை வைத்து அதன் மேல் ஆறு விளக்குகளை ஏற்றலாம்.
அகல் விளக்கில் நெய் அல்லது சுத்தமான நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். முருகனுக்கு உங்களால் முடிந்த நெய்வேத்தியம் ஏதேனும் ஒன்றை வைத்து, வெற்றிலை பாக்கு, தேங்காய் பழம் ஆகியவற்றை வைத்து தீப தூப ஆராதனை காட்டி வழிபாடு செய்யலாம்.
இந்த வழிபாட்டின் போது உங்களுக்கு தெரிந்த கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், வேல்மாறல் இது போன்ற ஏதேனும் ஒரு பாடல்களை பாராயணம் செய்யலாம். இந்த நாளில் முருகப்பெருமானை மட்டும் அன்றி சிவபெருமான், மகாலட்சுமி, விஷ்ணு இது போன்ற மற்ற கடவுள்களையும் வழிபடுவது சிறப்பை தரும்.