உடம்பில் வலு இல்லாமல் சோர்வாக இருக்கீங்களா? தினமும் இதுல ஒன்னு தவறாம சாப்பிடுங்க!
கேழ்வரகு,கேப்பை,ராகி என்ற பெயர்களில் அழைக்கப்படும் இந்த தானியம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.இந்த ராகியில் உள்ள அதிகளவு கால்சியம் சத்து எலும்புகளை வலுப்படுத்துகிறது.இதில் உள்ள நார்ச்சத்து உடலில் உள்ள கெட்ட கொழுப்பை வெளியேற்றி உடலை கட்டுக் கோப்பாக வைக்க பெரிதும் உதவுகிறது.இந்த தானியம் கடந்த காலங்களில் தென்னிந்தியர்களின் உணவு பட்டியலில் முதன்மை இடத்தை வகித்து வந்த நிலையில் தற்பொழுது இதன் பயன்பாடு குறைந்து விட்டது.
இந்த தானியத்தின் மகத்துவம் தெரியாமல் பலரும் இதனை தவிர்த்து வருகின்றனர்.இதில் கூல்,தோசை,அடை,சிமிலி உருண்டை,சப்பாத்தி,பூரி உள்ளிட்ட பல வித உணவுகள் செய்து சாப்பிடலாம்.இதில் சிமிலி உருண்டை மிகவும் சுவையாகவும்,அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கிறது.குழந்தைகளுக்கு தினமும் ஒரு உருண்டை கொடுத்து வந்தோம் என்றால் அவர்களின் வளர்ச்சி,உடல் ஆரோக்கியம் அனைத்தும் நன்றாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:-
ராகி மாவு – 1 கப்
உப்பு – 1/4 தேக்கரண்டி
வறுத்த வேர்க்கடலை – 1/4 கப்
எள் – 1/4 கப்
வெல்லம் – 3/4 கப்
செய்முறை:-
1.ஒரு பாத்திரத்தில் ராகி மாவு மற்றும் உப்பு சேர்த்து 1 கப் அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ள வேண்டும்.
2.அடுப்பில் தோசைக்கல் வைத்து சூடான பிறகு அதில் பிசைந்து வைத்துள்ள ராகி மாவை அடை போல் தட்டி இருபுறமும் நன்கு வேக வைக்க வேண்டும்.
3.அவற்றை ஒரு தட்டிற்கு மாற்றி ஆறிய பிறகு சிறு துண்டுகளாக மிக்ஸி ஜாரில் போட்டு கொர கொரப்பாக அரைத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றி கொள்ள வேண்டும்.
4.கருப்பு அல்லது வெள்ளை எள் மற்றும் வேர்க்கடலை,வெல்லம் சேர்த்து அரைத்து அவற்றை ஏற்கனவே அரைத்து வைத்துள்ள ராகியில் சேர்த்து உருண்டை பிடித்து கொள்ள வேண்டும்.