தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகராக வலம் வருபவர் “தம்பி ராமையா” அவர்கள். இவர் பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும், ஒரு ஸ்ட்ரிக்டான அப்பா கதாபாத்திரங்களிலும் நடித்து மக்களின் மனதில் ஒரு தனி இடம் பிடித்துள்ளார். இவர் நடித்த “வினோதய சித்தம்” திரைப்படம் பல மக்களின் மத்தியில் வெகு விமர்சையாக பேசப்பட்டது.
தற்போது இவர் “ராஜாகிளி” என்னும் திரைப்படத்திற்குக் கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி அதற்கு இசையும் அமைத்துள்ளார். இந்தப் படத்திற்கு அவரின் மகன் “உமாபதி ராமையாவை” இயக்குனராக அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இந்தப் படத்தில் தம்பி ராமையா அவர்கள் கதையின் நாயகனாக நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் அவரின் நண்பர் மற்றும் குடும்பத்தில் ஒருவராகக் கருதப்படும் நடிகர் சமுத்திரக்கனி மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை ஸ்வேதா, சுபா, நடிகர் பிரவீன், முபாசிர், இயக்குனர் மூர்த்தி உள்ளிட்டோர் இந்தப் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தைத் தயாரிப்பாளர் “சுரேஷ் காமாட்சி” தயாரித்துள்ளார். இந்தப் படம் வருகின்ற டிசம்பர் 13, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
படத்தின் இசை வெளியீட்டு விழா நவம்பர் 21, 2024 அன்று சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் வெற்றி கரமாக நடந்து முடிந்துள்ளது. விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் சத்தியஜோதி தியாகராஜன் மற்றும் நடிகர் அர்ஜுன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இந்தப் படம் உண்மை கதையைத் தழுவியது என்றும், இதில் சொல்லவரும் கருத்தை நம் இதயத்தில் இருந்து முழுமையாக எடுத்துச் செல்ல முடியும் என்றும் பல சுவாரஸ்யமான விஷயங்களைப் விழாவில் கலந்துகொண்ட நடிகர்கள் மற்றும் நடிகைகள் பகிர்ந்துள்ளனர்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் அர்ஜுன் பேசும்போது, “நானும் என் மருமகனும் நிற்கும் முதல் மேடை இது. இது முடிவில்லை, இனி எங்கள் கூட்டணியில் நிறைய படங்களை உருவாக்கப் போகிறோம். இந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை என்றாலும் இந்தப் படம் எனக்கு ஸ்பெஷல் தான். ஏனென்றால் என் சம்பந்தி ஹீரோ, என் மருமகன் டைரக்டர். இதுவரை நடித்த படங்களில் நான் நடிக்காத அளவிற்கு என் சம்மந்தி ஒரு ரொமாண்டிக் பாடலில் நடித்துள்ளார். இது சரியில்லை சார். இந்தப் படம் நிச்சயமாக ஒரு வெற்றிப் படமாக இருக்கும் என்று நான் வாழ்த்துகிறேன்” என்று மகிழ்ச்சியாகவும், சுவாரசியமாகவும் பேசியுள்ளார்.