ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதல் – பொதுமக்கள் 80 பேர் பலி!
மியான்மர் நாட்டில் ராணுவம் நடத்திய வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் 80 பேர் உயிரிழந்தனர்.
மியான்மர் நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டில் நடந்த பொது தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி, பிப்ரவரி மாதம் அந்த ஆட்சியை கலைத்த அந்த நாட்டு ராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
இந்நிலையில் அந்த நாட்டின் வடக்கு மாகாணமான கச்சினல் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல் அமைப்பின் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் விழா நடைபெற்ற அந்த பகுதியில் ராணுவத்தினர் திடீரென விமானம் மூலம் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் பாடகர்கள் மற்றும் இசை கலைஞர்கள் உட்பட 80 பேர் உயிரிழந்தனர்.
நேற்று அந்த நாட்டு ராணுவ அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தாக்குதல் உறுதிப்படுத்தப்பட்டது. இதனிடையே மியான்மர் ராணுவத்தின் இந்த தாக்குதலுக்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நிராயுதபாணியான பொதுமக்களுக்கு எதிராக ராணுவம் தாக்குதல் நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் இதற்கு இராணுவ அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.