கலைஞரின் கனவு இல்லம் திட்டம்!! மேலும் விடுவிக்கப்பட்ட ரூ.400 கோடி!!

Photo of author

By Gayathri

தமிழக அரசு ஏழைகளுக்கு இலவசமாக வீடு கட்டி தரும் வகையில் ” கலைஞர் கனவு இல்லம் ” திட்டத்தினை உருவாக்கியது. தற்பொழுது திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுமான பணிகளை துரிதப்படுத்தும் பொருட்டு மேலும் ரூ.400 கோடி விடுவித்து ஆணை வழங்கியிருக்கிறது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :-

2024 – 25 ஆம் ஆண்டிற்கான கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்ட ஒரு வீட்டுக்கு ரூ.3.50 லட்சம் வீதம் ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கீட்டுக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், ஏறத்தாழ 8 லட்சம் குடிசை வீடுகள் தமிழக கிராமப்புறங்களில் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்ட அனைவருக்கும் வீடு என்ற திட்ட கணக்கெடுப்பின் வழியாக அறியப்பட்டுள்ளது.

‘குடிசையில்லா தமிழகம்’ என்ற இலக்கை அடையும் பொருட்டு, வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஊரக பகுதிகளில் 6 ஆண்டுகளில் 8 லட்சம் வீடுகள் புதிதாக கட்டித்தர அறிவிப்பு வெளியாகி உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

நடப்பு நிதியாண்டான 2024 – 25 இல் ஒரு லட்சம் வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும், இத்திட்டத்தின் கீழ் கட்டப்படக்கூடிய வீட்டின் பரப்பளவு, சமையலறை உட்பட, 360 சதுர அடியாகும். பயனாளிகளின் நிதிச்சுமையை குறைக்கும் பொருட்டு இத்திட்டத்தின் கீழ் டான்செம் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகள் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்டு அந்தந்த துறைகளின் மூலம் வழங்கப்பட்டும் வருவது குறிப்பிடத்தக்கது.

குறிப்பு :-

இதுவரை தமிழக அரசால் ரூ.1,051.34 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு, பயனாளிகளுக்கு வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப ரூ.860.31 கோடி தொகை விடுவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், இதனுடன் துறை மூலம் வழங்கப்படும் சிமெண்ட் மற்றும் இரும்பு கம்பிகளுக்கு என ரூ.135.30 கோடி தொகையும் சேர்த்து மொத்தம் ரூ.995.61 கோடி இதுவரை கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் செலவினம் செய்யப்பட்டுள்ளதாக இந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.