பைக் டாக்சிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்..!!
சென்னை போன்ற முக்கியமான நகரங்களில் ஓலா மற்றும் ரேபிடோ போன்ற தனியார் நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை வழங்கி வருகிறார்கள். இந்த பைக் டாக்சிகள் ஆட்டோக்களை விட குறைவான கட்டணம் பெறுவதால், பெரும்பாலான மக்கள் பைக் டாக்சி சேவையை பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் இதுபோன்ற பைக் டாக்சிகளால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் ஒன்று சேர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதாவது ஒரு தனி நபர் ஆட்டோவில் 10 கிமீ தூரம் செல்ல வேண்டுமென்றால் 900 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். அதுவே பைக் டாக்சியில் 200 ரூபாய் செலுத்தினால் போதும்.
அதேபோல் 5 கிமீ தூரம் செல்வதற்கு ஆட்டோவில் 300 ரூபாய் என்றால் பைக் டாக்சியில் வெறும் 70 ரூபாய் செலுத்தினால் போதும். இதனால் பெரும்பாலான தனிநபர்கள் பைக் டாக்சியை தேடி செல்கிறார்கள். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு ஆட்டோவிற்கு கூட இஎம்ஐ கட்ட முடியாத சூழ்நிலையில் இருப்பதாக ஆட்டோ ஓட்டுநர்கள் கூறியுள்ளனர்.
மேலும், இதுபோன்ற பைக் டாக்சிகளுக்கு இந்தியா முழுவதும் எங்குமே அனுமதி கிடையாது. ஆனால், இவை இயங்கி வருகிறது. இந்த பைக் டாக்சியால் பல பிரச்சனைகள் நடந்துள்ளன. அந்த வகையில் சாலை விபத்துகள், பைக் டாக்சியில் செல்லும் பெண்களுக்கு பாலியல் தொல்லை போன்றவை நடந்துள்ளன. எந்தவொரு முறையான அனுமதியும் பெறாமல் எங்களின் வாழ்வாதரத்தையே நசுக்கி விட்டார்கள் என ஆட்டோ ஓட்டுனர்கள் குமுறி வருகிறார்கள்.
பொதுமக்கள் ஆட்டோக்களில் மீட்டர் போட மறுப்பதாக எங்கள் மீது குற்றம் சாட்டி வருகிறார்கள். எனவே அரசு மீட்டர் கட்டணத்தை முறைப்படி நிர்ணயித்து ஒழுங்குப்படுத்தினால், அதன்படி ஆட்டோ ஓட்டுவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம் என கூறியுள்ளனர். இதற்கு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்.